பெங்களூரு,
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை பவித்ரா கவுடாவுக்கு சொகுசு வசதிகள் அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டு கூறிய முன்னாள் பெண் கைதி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருப்பவர் தர்ஷன். இவரது தோழியும், நடிகையுமாக இருந்து வருபவர் பவித்ரா கவுடா. இவருக்கு இன்ஸ்டாகிராமில் ஆபாச புகைப்படங்கள் அனுப்பியதாக சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கடந்த 2024-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டு இருந்தார். இந்த கொலையில் நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா கைது செய்யப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், பரப்பன அக்ரஹாரா சிறையில் குற்ற வழக்கு ஒன்றில் அடைக்கப்பட்டு, தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ள முன்னாள் பெண் கைதியான சந்தியா நாகராஜ் என்பவர், சிறையில் நடிகை பவித்ரா கவுடாவுக்கு சொகுசு வசதிகள் அளிக்கப்படுவதாக பரபரப்பு குற்றச் சாட்டுகளை கூறியுள்ளார்.
இதுகுறித்து சந்தியா நிருபர்களிடம் கூறுகையில், நான் சிறைவாசம் அனுபவித்தபோது பவித்ரா கவுடாவுக்கு சிறை பெண் அதிகாரி, பிற ஊழியர்கள் சொகுசு வசதி அளித்தனர். பெண்கள் அடைக்கப்பட்டுள்ள பாரக்கில் நானும் அடைக்கப்பட்டு இருந்தேன். அப்போது பவித்ரா கவுடாவுக்கு வீட்டில் இருந்தே உணவுகள் கொண்டு வரப்பட்டு கொடுக்கப்பட்டது. இதனை சிறை அதிகாரி, ஊழியர்கள் கண்டுகொள்ளவில்லை. பவித்ரா கவுடாவுக்கு சேலைக்கான ஊக்கு கொடுக் கப்பட்டது. நாங்கள் கேட்டால் தர மறுத்தனர்.
பவித்ரா கவுடா அவரை அலங்கரித்து கொள்வதற்காக 'லிப் ஸ்டிக்' உள்ளிட்ட அழகு சாதன பொருட்களை வழங்கினார்கள். இதுபோன்ற பல வசதிகளை பவித்ரா கவுடா அனுபவித்தார். இதுபற்றி தங்கம் கடத்தல் வழக்கில் சிக்கிய நடிகை ரன்யா ராவ் சிறை அதிகாரிகளிடம் கேட்டு சண்டை போட்டார். இதுபற்றி சிறைத்துறை டி.ஜி.பி. அலோக்குமார் கவனத்துக்கு கொண்டு செல்வேன். ஆண்கள் பாரக்கில் அடைக்கப்பட்டுள்ள தர்ஷன் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்றார்.