கடந்த ஆண்டு மே 1ம் தேதி சூர்யாவின் ‘ரெட்ரோ’ திரைப்படம் வெளியானது. நடிகர் சூர்யாவின் 44-வது படமான ‘ரெட்ரோ’ படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருந்தார். சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.
பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும், வசூலில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ரூ.235 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. இப்படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
‘ரெட்ரோ’ படத்தில் நடித்த நினைவுகளைப் பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் “ரெட்ரோவின் ஓராண்டு நிறைவு. புயல்கள், தசைநார் கிழிவு, முடிவில்லா சேறு, எங்கள் படகு தீப்பிடித்த தருணம் மற்றும் பாம்புகள் நிறைந்த ஒரு தீவு... எல்லா வகையிலும் பார்த்தால், இது ஒரு முழுமையான குழப்பமாகவே இருந்திருக்க வேண்டும். ஆனால், அப்படி இருக்கவில்லை. அது அமைதியாலும், நேர்மறை அதிர்வுகளாலும், நிறைய சிரிப்பொலிகளாலும், எதையும் 'வெறும் காதலுக்காகவே' உருவாக்குகிறோம் என்ற உணர்வாலும் நிறைந்திருந்தது. ஏனெனில், சரியான மனிதர்களுடன் இணைந்து, சினிமாவின் மீதான காதலுக்காக நீங்கள் படைக்கும்போது, மிகக் கடினமான நாட்கள்கூட எளிதாகவே தோன்றுகின்றன. கார்த்திக் சுப்பராஜ் - எங்கள் 'கேப்டன். நான் 'ருக்கு'வாக நடிக்க முடியும் என்று நீங்கள் என் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி” என மனத் திறந்து பாராட்டியுள்ளார்.