‘ஒரு அடார் லவ்’ என்ற மலையாள படத்தின் மூலமாக அறிமுகமாகி, கண் சிமிட்டி இந்திய ரசிகர்களை தன் வசப்படுத்தியவர் பிரியா வாரியர். மலையாளம் தாண்டி இந்தி, கன்னடம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’, ‘குட் பேட் அக்லி’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார். பிரியாவுக்கு கேரளா திருச்சூர் சொந்த ஊராகும். இவர் மோகினியாட்ட கலைஞராவார்.
‘குட் பேட் அக்லி’ படத்தில் அர்ஜுன் தாஸுடன் ‘தொட்டு தொட்டு பேசும் சுல்தானா’ பாடலுக்கு பிரியா வாரியர் நடனம் ஆடியது ரசிகர்கள் மட்டுமில்லாது, சமூக வலைதளங்களிலும் பெரிய வரவேற்பை பெற்றது. ‘சர்வம் மாயா’ படத்தில் சின்ன கெஸ்ட் ரோலில் அவர் நடித்து இருந்தார்.
ஜான்வி கபூர் மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா நடித்து இருந்த ‘பரம்சுந்தரி’ என்ற இந்தி படத்தில் பிரியா வாரியர் ஒரு காட்சியில் மட்டும் இருப்பது தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. படங்களில் ஓரிரு காட்சிகளில் மட்டுமே தலை காட்டி வரும் பிரியா வாரியர் குறித்து இணையத்தில் சில விமர்சனங்கள் வெளியானது. பிரியா வாரியர் சின்ன ரோல்களில் நடித்தே காலத்தை தள்ளப் பார்க்கிறார். கவர்ச்சி தான் அவரை காப்பாற்றுகிறது. ஜூனியர் ஆர்டிஸ்ட். கூட்டத்தில் ஒருவர் என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டு வருகிறார்.
இதையடுத்து தன் மீதான விமர்சனங்களுக்கு பிரியா வாரியர் காட்டம் தெரிவித்துள்ளார். “உண்மைக்கு புறம்பான செய்திகள் கமெண்ட்டுகள் என்ற பெயரில் சுற்றுகின்றன. இதுபோல மோசமான பேர்வழிகளை எதுவுமே செய்யமுடியாது. லைக்குகளுக்காக இப்படி செய்வதால் என்ன ஆகிவிட போகிறது. இந்த நிலை மாறத்தான் வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.