சினிமா செய்திகள்

அவருடைய வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஆசை - நடிகை பிரியங்கா மோகன்

அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால், அதில் மனநிறைவுடன் நடிப்பேன் என்று பிரியங்கா மோகன் தெரிவித்துள்ளார்.

தெலுங்கில் அறிமுகமாகி தமிழ் மொழியில் இன்று கொடி கட்டி பறப்பவர் நடிகை பிரியங்கா மோகன். தெலுங்கில் கேங்ஸ்டர் என்ற திரைப்படத்தின் மூலம் அவர் பிரபலமானார். நானியுடன் சேர்ந்து அவர் நடித்த அத்திரைப்படம் பெரிய ஹிட் அடித்தது. இதைத் தொடர்ந்து நெல்சன் இயக்கிய டாக்டர் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் அவர் தமிழுக்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே ஒட்டுமொத்த கோலிவுட் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

அதனை தொடர்ந்து சூர்யாவுடன் 'எதற்கும் துணிந்தவன்', தனுஷூடன் 'கேப்டன் மில்லர்', ரவிமோகனுடன் 'பிரதர்' உள்பட பல படங்களில் நடித்தார். தமிழ் தவிர, தெலுங்கு, கன்னடத்திலும் தற்போது பிசியா நடித்து வருகிறார்.

இவர் இயக்குனர் ரா. கார்த்திக் இயக்கத்தில் மேட் இன் கொரியா என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இப்படம் முழுவதும் பீல் குட் பாணியில் எடுக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இப்படம், நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வருகிற 12 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கவினுடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில், நடிகை பரியங்கா மோகன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன். அதே நேரம் மறைந்த நடிகை சவுந்தர்யாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால், அதில் மனநிறைவுடன் நடிப்பேன்” என்று கூறியுள்ளார்.