சினிமா செய்திகள்

ரம்யா கிருஷ்ணனின் 55-வது பிறந்தநாள்: “டேவிட் ரெட்டி” படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியீடு

இன்று தனது 55வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் வந்து குவிந்து வருகிறது.

ரம்யா கிருஷ்ணனின் 55-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் சிறப்பு போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் 1999-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் 'படையப்பா' படம் வெளியாகி ஹிட் அடித்தது. அதில் ரம்யா கிருஷ்ணன் 'நீலம்பரி' என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அந்த படத்திற்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து மீண்டும் ‘ஜெயிலர்’ படம் மூலமாக ரஜினியுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் நடித்த ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வரும் அக்டோபர் 15 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

“ராஜ மாதா”

பாகுபலி படத்தில் ராஜ மாதாவாக நடித்து பாராட்டுகளை பெற்றார் ரம்யா கிருஷ்ணன். 1985இல் வெளியான ரஜினிகாந்தின் 'படிக்காதவன்', 1987-ல் கமல்ஹாசனின் 'பேர் சொல்லும் பிள்ளை' உள்ளிட்ட படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்தார். 1991-ல் பாலசந்தர் தயாரிப்பில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கதையின் நாயகனாக நடித்த 'சிகரம்' படத்தில் நவீன சிந்தனைகள் கொண்ட இளம் பெண்ணாகத் துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்தார். விஜயகாந்தின் மெகா ஹிட் திரைப்படமான 'கேப்டன் பிரபாகரன்' படத்தில் ஒரு சின்ன துணைக் கதாபாத்திரத்தில் நடித்தார். அதில் அவர் நடனமாடிய 'ஆட்டமா தேரோட்டமா' பாடலும் பட்டிதொட்டி எங்கும் அவரைக் கொண்டு சேர்த்தது. சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, மோகன்பாபு. நாகர்ஜுனா. ராஜசேகர், ராஜேந்திர பிரசாத் என முன்னணி நாயக நடிகர்கள் அனைவருடனும் நடித்துள்ளார்.

‘டேவிட் ரெட்டி’ படம்

தெலுங்கில் மஞ்சு மனோஜ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘டேவிட் ரெட்டி’. ஹனுமா ரெட்டி யக்கந்தி இப்படத்தை இயக்குகிறார். பிரிட்டிஷ் ஆட்சிக்கால பின்னணி அதிரடிக் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் மரியா ரியா போஷாப்கா கதாநாயகியாக நடிக்க, ரம்யா கிருஷ்ணன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இன்று ரம்யா கிருஷ்ணனின் 55-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் சிறப்பு போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இதில் அவர், கமலா ரெட்டி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில், அவர் எதிரிகளை வீழ்த்திய பிறகு சிம்மாசனத்தில் அமர்ந்து கையில் வாளுடன் மிகவும் கம்பீரமான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். கமலா ரெட்டி கதாபாத்திரத்தை இப்படத்தில் ஒரு முக்கியமான பாத்திரமாகத் தயாரிப்பாளர்கள் சித்தரித்துள்ளனர். மேலும், இந்த வேடம் ரம்யா கிருஷ்ணனின் திரைவாழ்க்கையில் மற்றொரு மறக்க முடியாத கதாபாத்திரமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரம்யா கிருஷ்ணனுக்கு திரைத்துறை பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT