திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 10-ந் தேதி காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி கோவிலிலே தங்கி விரதம் இருந்து வருகிறார்கள்.
இதற்கிடையே தினமும் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்துடன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று (12-ந் தேதி)ஆந்திரா மாநில முன்னாள் அமைச்சரும், பிரபல நடிகையுமான ரோஜா கோவிலின் கருவறைக்கு சென்று பயபக்தியுடன் முருகப்பெருமானை தரிசனம் செய்தார். பின்னர் அவர் வல்லப கணபதி சன்னதி அருகே உள்ள வாசல் வழியாக வெளியே வந்தார்.
இந்த நிலையில் கோவிலின் வெளிப் பிரகாரமான சஷ்டி மண்டபம் வளாகத்தில் ரோஜா தனது ரசிகர்கள் மற்றும் கோவிலில் விரதம் இருக்க கூடிய பெண் பக்தர்கள் விருப்பத்திற்கு ஏற்ப போட்டோக்கள் மற்றும் செல்பி எடுத்து கொண்டார். இதனை தொடர்ந்து அங்கு இருந்து காரில் புறப்பட்டு சென்றார். நேற்று முன்தினம் திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த நிலையில் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலிலும் சாமி தரிசனம் செய்தார்.