நடிகை சமந்தா ரூத் பிரபு கடைசியாக கடந்த ஆண்டு வெளியான ‘சுபம்’ திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இந்த படம் அவரது தயாரிப்பில் வெளியான முதல் திரைப்படமாகும். இதனைத் தொடர்ந்து, ‘மா இன்டி பங்காரம்’ திரைப்படத்தை சமந்தா தயாரித்து, கதாநாயகியாகவும் நடித்துள்ளார். இயக்குநர் பி.வி. நந்தினி ரெட்டி இயக்கியுள்ள இந்தப் படத்தில் கவுதமி, மஞ்சுஷா, திகந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படம், 1980-களின் பின்னணியில் குடும்பம் மற்றும் அதிரடியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. தமிழில் இந்தப் படம் ‘எங்கள் தங்கம்’ என்கிற தலைப்பில் வெளியானது.
சமந்தா தயாரித்து நடித்துள்ள புதிய திரைப்படமான ‘மா இன்டி பங்காரம்’ கடந்த 19ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. கடந்த 4 தினங்களில் மட்டும் சுமார் ரூ.50 கோடி வரை வசூலித்திருக்கிறது. இப்படத்தின் மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியாகி இருக்கும் நிலையில், இதில் நடிப்பதற்காக சமந்தா எடுத்திருக்கும் ரிஸ்க் குறித்து அனைவரும் பேசி வருகின்றனர்.
இப்படத்தின் விழாவில் நடிகை சமந்தா கலந்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. சமந்தா கர்ப்பமாக இருப்பதாகத் தகவல்கள் வெளியானது.
இத்தகவலை நடிகை சமந்தா உறுதிப்படுத்தியிருக்கிறார். ஐதராபாத்தில் நேற்று நடைபெற்ற ‘மா இன்டி பங்காரம்’ படத்தின் சக்சஸ் மீட்டில் இத்தகவலை அவர் பகிர்ந்து கொண்டார். அந்த நிகழ்வில் பேசியவர், “இன்னும் ஒரு சிறிய இடைவெளி எடுக்கப்போகிறேன். அதன் பிறகு நான் மீண்டும் வந்துவிடுவேன். நான் இப்போது மகப்பேறு விடுப்பு எடுக்க வேண்டும். இந்தத் தருணத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்றார்.
நடிகர் நாக சைதன்யாவிடமிருந்து விவாகரத்து பெற்ற பிறகு, நீண்ட காலமாக தனிமையில் இருந்த சமந்தாவின் திருமணம் கடந்தாண்டு டிசம்பர் மாதம் இயக்குநர் ராஜ் நிதிமொருவுடன் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.