நடிகை ஷகிலா 
சினிமா செய்திகள்

நடிகை ஷகிலாவுக்கு கழுத்தில் அறுவை சிகிச்சை

அளவுக்கு மீறி போனைப் பயன்படுத்துவது பெரும் பண இழப்பையும் கடுமையான உடல் வேதனையையும் மட்டுமே தரும் என நடிகை ஷகிலா தெரிவித்தார்.

சென்னை,

பிரபல நடிகை ஷகிலா சமீபத்தில் தீவிர கழுத்து நரம்பு பாதிப்பு காரணமாக ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்துகொண்டு வீடு திரும்பினார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் தற்போது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தனது யூடியூப் சேனல் மற்றும் சமூக வலைதளப் பக்கங்கள் வாயிலாகத் தமக்கு ஏற்பட்ட இந்த உடல்நலப் பாதிப்பு குறித்து ஷகீலா கூறியதாவது:-

போன் மோகத்தால் நேர்ந்த விபரீதம்

படுக்கையில் பல மணி நேரம் ஒருபுறமாகச் சாய்ந்து கொண்டு, இடைவிடாமல் சுமார் 4 மணி நேரம் வரை தனது மொபைல் போனில் கேம் விளையாடுவதையும், தொடர்ந்து இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் ரீல்ஸ்களைப் பார்ப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார் ஷகீலா. இந்தத் தொடர்ச்சியான தவறான உடல் அசைவு மற்றும் அதிகப்படியான செல்போன் பயன்பாடு காரணமாக, அவரது கழுத்துப் பகுதியில் இருந்த முக்கிய இரத்த நாளங்களும் நரம்புகளும் கடுமையாகப் பாதிப்படைந்தன.

கழுத்தில் அறுவை சிகிச்சை

வலி தீவிரமடைந்ததை அடுத்து, சென்னையில் உள்ள மெட்வே ஆஸ்பத்திரியில் மருத்துவர் பாலமுருகன் குழுவினர் இவருக்கு பிரதான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்தனர். இந்த சிகிச்சைக்குச் சுமார் ரூ.3 லட்சம் வரை செலவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு தற்போது வீடு திரும்பியுள்ள ஷகீலா, மருத்துவர்களின் கடுமையான அறிவுரைப்படி கழுத்துப்பட்டை அணிந்து ஓய்வெடுத்து வருகிறார். படுக்கையிலிருந்து எழுவது, சாப்பிடுவது உள்ளிட்ட அன்றாடச் சாதாரணச் செயல்களுக்குக் கூட தற்போது மற்றவர்களின் (பராமரிப்பாளர்களின்) உதவி தனக்குத் தேவைப்படுவதாக அவர் வேதனையுடன் தெரிவித்தார்.

ரசிகர்களுக்கு ஷகீலாவின் உருக்கமான எச்சரிக்கை

தன் மூலமாகப் பொதுமக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்பிய ஷகீலா, "செல்போன் என்பது மிக அவசியமான மற்றும் பயனுள்ள ஒரு பொருள் தான், ஆனால் அதைத் தேவைக்கு அதிகமாகப் பயன்படுத்தி நேரத்தை வீணடிக்காதீர்கள்" என எச்சரித்தார்.

மேலும், அளவுக்கு மீறி போனைப் பயன்படுத்துவது பெரும் பண இழப்பையும் கடுமையான உடல் வேதனையையும் மட்டுமே தரும் என்றும், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்குத் தேவையற்ற முறையில் மொபைல் போன்கள் மற்றும் கேட்ஜெட்களைக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் அன்போடு கேட்டுக்கொண்டார்.