சென்னை,
தமிழகத்தின் 13-ஆவது முதல்-அமைச்சராக தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் இன்று காலை 10.15 மணியளவில் பதவியேற்றார். தமிழக கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விஜய்க்கு முதல்-அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதன்பின்னர், 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். பின்னர் சென்னை தலைமைச்செயலகம் வந்த முதல்-அமைச்சர் விஜய் முறையாக பதவியேற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து அரசின் கோப்புகளில் கையெழுத்திட்டார்.
இந்த பதவியேற்பு விழாவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் தவெக கட்சியினர், விஜய் குடும்பத்தினர், நடிகை திரிஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் தமிழக முதல்-அமைச்சராக விஜய் பேசிய பேச்சு, விஜய்யின் செல்பி வீடியோ உள்ளிட்ட விஷயங்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.
இந்நிலையில், தமிழக முதல்-அமைச்சர் விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக நடிகை சிம்ரன் தனது எக்ஸ் தளத்தில், “எனது அன்பு நண்பரும், மக்கள் தலைவரும், உண்மையான ‘ஜனநாயகனுமான’விஜய், தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்றதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் இன்றைய நாள் வெறும் வரலாற்று சிறப்புமிக்கது மட்டுமல்ல. இது ஒரு வலிமையான புதிய சகாப்தத்தின் தொடக்கத்தையும் குறிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.