தமிழக முதல் அமைச்சர் விஜய் நேற்று தனது 52வது பிறந்த நாளைக் கொண்டாடினார். விஜய் பிறந்த நாளுக்கு அவரின் ரசிகர்கள், கட்சி நிர்வாகிகள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். கடந்த ஆண்டு பிறந்த நாளை நடிகராகவும் தவெக தலைவராகவும் கொண்டாடிய விஜய், இந்த ஆண்டு முதல் அமைச்சராகக் கொண்டாடியதால், அவரது ரசிகர்கள் தமிழகம் முழுவதும் அன்னதானம் உள்ளிட்டவற்றை வழங்கி உற்சாகமாகக் கொண்டாடினர்.
விஜய்யுடன் நடித்த சக நடிகைகள், நடிகர்கள் சமூக வலைத்தளங்களிலும் வாழ்த்து பதிவிட்டனர். அந்த வகையில், முதல் அமைச்சர் விஜய்யுடன் பல படங்களில் ஒன்றாக நடித்தவருமான நடிகை திரிஷா வாழ்த்து சொல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திரிஷா நேற்று வாழ்த்து தெரிவிக்கவில்லை.
கடந்த ஆண்டு பிறந்த நாளுக்கு முதல் ஆளாக வாழ்த்து சொன்ன திரிஷா, நேற்று விஜய்யின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லாதது அவரது ரசிகர்கள் இடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல் அமைச்சராக விஜய் பதவியேற்கும் நிகழ்ச்சியில் நேரடியாகக் கலந்து கொண்ட திரிஷா, தேர்தல் முடிவு வெளியான நாளன்று வீட்டிற்கே சென்று வாழ்த்து தெரிவித்தார். ஆனால், பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறாதது அவரது ரசிகர்கள் இடையே பேசுபொருளாகியுள்ளது.