சினிமா செய்திகள்

நடிகை வேதிகா அம்மாவின் போன் ஹேக்: ரசிகர்களுக்கு எச்சரிக்கை

நடிகை வேதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிர்ச்சியூட்டும் தகவலை பகிர்ந்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் வேதிகா. மும்பையில் பிறந்த அவர், 2006-ஆம் ஆண்டு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்த மதராசி திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து கிடைத்த வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்தி, தென்னிந்திய திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

இந்த நிலையில், நடிகை வேதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிர்ச்சியூட்டும் தகவலை பகிர்ந்துள்ளார். அதில், தனது அம்மாவின் போன் எண் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

வேதிகா வெளியிட்டுள்ள பதிவில், “எனது அம்மாவின் போன் எண் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அந்த எண்ணில் இருந்து பணம், ஓடிபி, தனிப்பட்ட தகவல்கள் அல்லது எந்தவிதமான உதவியும் கேட்டு வரும் அழைப்புகள், கோரிக்கைகளுக்கு யாரும் பதிலளிக்க வேண்டாம். மேலும், அந்த எண்ணில் இருந்து அனுப்பப்படும் எந்த லிங்க்குகளையும் கிளிக் செய்ய வேண்டாம்” என்று எச்சரித்துள்ளார்.

மேலும், “இந்த பிரச்சினை சரிசெய்யப்பட்டவுடன் அனைவருக்கும் அப்டேட் தருகிறோம். தயவுசெய்து இந்த தகவலை உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். பாதுகாப்பாக இருங்கள்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நடிகை வேதிகாவின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.