சினிமா செய்திகள்

எம்.ஜி.ஆருடன் 'பச்சைக்கிளி... முத்துச்சரம்' பாடலில் நடித்த நடிகை காலமானார்

எம்.ஜி.ஆர். இயக்கி, நடித்து வெளியான 'உலகம் சுற்றும் வாலிபன்' திரைப்படத்தில் நடித்த தாய்லாந்து நடிகை மெட்டா ரூங்ராட் தனது 83-வது வயதில் காலமானார்.

உடல்நலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டிருந்த மெட்டா ரூங்ராட், நவம்பர் 3-ம் தேதி (நேற்று) தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.

'உலகம் சுற்றும் வாலிபன்' மூலம் பிரபலம்

கடந்த 1973-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். இயக்கி, கதாநாயகனாக நடித்த திரைப்படம் 'உலகம் சுற்றும் வாலிபன்'. வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட இந்தப் படத்தில் தாய்லாந்து நடிகையான மெட்டா ரூங்ராட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் நான்காவது கதாநாயகியாக அவர் இடம்பெற்றிருந்தார்.

குறிப்பாக, எம்.ஜி.ஆருடன் இணைந்து அவர் நடித்த 'பச்சைக்கிளி... முத்துச்சரம்' பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் பாடல் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தார்.

180-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர்

தனது 19-வது வயதில் திரையுலகில் அறிமுகமான மெட்டா ரூங்ராட், தாய்லாந்து சினிமாவில் புகழ்பெற்ற நடிகையாக விளங்கினார். 40 ஆண்டுகளுக்கும் மேலான தனது கலைப்பயணத்தில் 180-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார். வயது முதிர்வு காரணமாக பார்வைக் குறைபாடு ஏற்பட்டபோதும், நடிப்பின் மீதான ஆர்வத்தைக் கைவிடாமல் தொடர்ந்து கலைத்துறையில் பயணித்தார்.

83 வயதில் மரணம்

இந்த நிலையில், உடல்நலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டிருந்த மெட்டா ரூங்ராட், நவம்பர் 3-ம் தேதி (நேற்று) தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 83. அல்சைமர், நீரிழிவு மற்றும் தைராய்டு உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகளால் அவர் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் நினைவில் நிற்கும் மெட்டா ரூங்ராட்டின் மறைவு திரையுலகினரையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

SCROLL FOR NEXT