சினிமா செய்திகள்

"நடிகைகளுக்கும் குடும்பம் இருக்கும்..." - இயக்குநர் அமீர்

நடிகை குறித்த சி.வி. சண்முகத்தின் பேச்சுக்கு இயக்குனர் அமீர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

விழுப்புரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் நடிகை குறித்து சி.வி. சண்முகம் பேசியது சர்ச்சையான நிலையில், பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

முதல்வரின் ‘கனவைச் சொல்லுங்கள்’ திட்டம் குறித்து பேசியபோது, நடிகை ஒருவரை குறிப்பிட்டு சி.வி. சண்முகம் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதில் சி.வி. சண்முகம் பேசியதாவது, ‘அப்துல்கலாம் கனவு காணுங்கள் என்று சொன்னார். மு.க.ஸ்டாலின் அதைவிட ஒரு படி மேலே சென்று உங்கள் கனவை சொல்லுங்கள் என்கிறார். எனக்கு ஒரு நடிகை(நடிகையின் பெயரை குறிப்பிட்டு) வேணும் இவர் நிறைவேற்றுவாரா. நடிகையை எனக்கு கல்யாணம் பண்ணி வையுங்கள் என்று கேட்பார்கள் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுவாரா?’ என்றார்.

இதையடுத்து அவரது பேச்சுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்தவகையில் இயக்குனர் அமீர் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

“நடிகைகளுக்கும் குடும்பம் இருக்கும் என்பதை மறந்துவிட்டு அரசியல் மேடைகளில் அவர்களைப் பற்றி தவறாக பேச வேண்டாம். நாகரிக அரசியலை பழகுங்கள் அரசியல்வாதிகளே.." என்று தெரிவித்துள்ளார்.