தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார், நபா நடேஷ். மாடல் அழகியும் கூட. இவரது நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்து ஓடிக் கொண்டிருக்கும் 'நாக பந்தம்' என்ற புராண படமும் இவருக்கு நல்ல பெயரை வாங்கி தந்திருக்கிறது. இந்தப் படம் மூலமாக பான் இந்தியா கதாநாயகியாகவும் உயர்ந்திருக்கிறார். விரைவில் தமிழ் படத்தில் நடிக்கப் போவதாகவும் பேச்சு அடிபடுகிறது.
இந்த நிலையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை நபா நடேஷ் தனது திரைப்பயணம் பற்றி பகிர்ந்து கொள்கிறார்.
"என் சினிமா பயணம் எதிர்பாராதது. நான் சினிமாவுக்கு வருவேன் என்று கொஞ்சம் கூட கற்பனை செய்து பார்த்தது கிடையாது. ஆனால் காலம் கொடுத்த அதிர்ஷ்டம், நான் சினிமாவில் இருக்கிறேன். 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும், 'நாகபந்தம்' ரொம்பவே வித்தியாசமான படம். 'நாகபந்தம்' சாதாரண படம் அல்ல. நமது சனாதான தர்மத்தையும், வரலாற்று உண்மையையும் உள்ளடக்கிய படம்.
பொதுவாக எந்த படங்கள் திரைக்கு வந்தாலும், அதை ஓ.டி.டி.யில் பார்த்துக்கொள்ளலாமே என்று சாதாரணமாக இருந்து விடக்கூடாது. திரைப்படங்களை தியேட்டர்களுக்கு சென்று பார்த்து ரசிகர்கள் கொண்டாட வேண்டும். அதுதான் உண்மையான கொண்டாட்டம். தியேட்டர்களில் கிடைக்கும் அனுபவத்தை ரசிகர்கள் 'மிஸ்' செய்யக்கூடாது.
தெலுங்கு, கன்னட மொழிகளில் படங்கள் நடித்துவிட்டேன். விரைவில் மலையாளத்தில் நடிப்பேன். முக்கியமாக தமிழில் நடிக்க நான் மிகவும் ஆசையாக இருக்கிறேன். எனக்கு தமிழில் பேச கொஞ்சம் கொஞ்சம் தெரியும். விரைவில் சரளமாக தமிழில் பேசி அசத்துவேன். தமிழ் ரசிகர்களிடம் அன்பை பெறவேண்டும் என்பது எல்லா பிரபலங்களின் ஆசை. அது எனக்கும் உண்டு. அது நடக்கும் என்று நம்புகிறேன்.
என்னைப் பொறுத்தவரை முடியாததை முடித்துக் காட்டுவதே என் பலம். எந்த சூழ்நிலையிலும் என் உறுதித்தன்மையையும், நம்பிக்கையையும் விட்டுக்கொடுத்ததே கிடையாது. முடிந்தளவு போராட வேண்டும் என்பதே என் நோக்கம். அப்படித்தான் என் வாழ்நாளின் ஒவ்வொரு நாளையும் கடத்தி வருகிறேன்.
"திரைத்துறையில் நடிகர்களை காட்டிலும் நடிகைகளுக்கு மிகப்பெரிய சவால்கள் காத்திருக்கின்றன. அந்த சவால்களை தாண்டி சாதனை படைக்க பொறுமையும், நம்பிக்கையும்தான் தேவை. எல்லா நடிகைகளுக்கும் அது இருக்க வேண்டும்" என்றார்.