சினிமா செய்திகள்

’தி கேரளா ஸ்டோரி 2’ படத்தில் நடிக்காதது ஏன்? - மவுனம் கலைத்த அதா சர்மா

’தி கேரளா ஸ்டோரி ’ படத்தில் அதா சர்மா நடித்த கதாபாத்திரம் ரசிகர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

மும்பை,

அதா சர்மா நடித்த ’தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் மிகப்பெரிய சர்ச்சையையும், அதே நேரத்தில் பெரும் வரவேற்பையும் பெற்றது. இந்த படத்தில் அதா சர்மா நடித்த கதாபாத்திரம் ரசிகர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இதன் தொடர்ச்சியாக ‘தி கேரளா ஸ்டோரி 2’ அறிவிக்கப்பட்டபோது, அந்த படத்தில் அதா சர்மாவின் பெயர் இடம்பெறாதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏன் அவர் இதில் இல்லை என்ற கேள்வி சமூக வலைதளங்களில் எழுந்தது.

இந்நிலையில், இதுவரை இதுகுறித்து எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருந்த அதா சர்மா தற்போது தனது மவுனத்தை உடைத்துள்ளார். அவர் பேசுகையில்,

“நான் ஒரு படத்தில் நடித்திருந்தால், அந்தப் படத்தைப் பற்றி பேசுவதில் எனக்கு மகிழ்ச்சி இருக்கும். ஆனால் நான் அந்தப் படத்தின் பகுதியாக இல்லாதபோது, வெறும் செய்திகளில் வருவதற்காக அதைப் பற்றி பேசுவது சரியானது அல்ல என்று நினைக்கிறேன். ‘தி கேரளா ஸ்டோரி 2’ படத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டதா இல்லையா என்பது தயாரிப்பாளர்களுக்கும், நடிகருக்கும் இடையே இருக்க வேண்டிய விஷயம், அதை பொதுவாக வெளியே விவாதிப்பது சரியானது அல்ல” என்றார்.

மேலும் முதல் பாகம் குறித்து அவர் கூறுகையில், “முதல் படம் ஆப்கானிஸ்தானில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் முகாம்களைப் பற்றியும், ஒரு சாதாரண பெண் எப்படி படிப்படியாக தீவிரவாதியாக மாறுகிறார் என்பதையும் காட்டியது. ஆனால் இரண்டாம் பாகம் முற்றிலும் வேறு கதையை கொண்டது,” என தெரிவித்தார்.