உலக சினிமாவின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவராகப் போற்றப்படுபவர் கிறிஸ்டோபர் நோலன். 'தி டார்க் நைட்', 'இன்செப்ஷன்', 'இன்டர்ஸ்டெல்லார்', 'தி பிரெஸ்டீஜ்', 'ஓப்பன்ஹெய்மர்' உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் உலகம் முழுவதும் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். சிக்கலான திரைக்கதை, வித்தியாசமான காட்சியமைப்பு மற்றும் புதுமையான திரைப்பட அனுபவத்தை வழங்குவதில் நோலன் தனி முத்திரை பதித்துள்ளார்.
தனது திரைப்படங்களில் ரசிகர்களுக்கு மிகத் துல்லியமான காட்சி அனுபவத்தை வழங்குவதற்காக கிறிஸ்டோபர் நோலன் பெரும்பாலும் ஐமேக்ஸ் (IMAX) கேமராக்களை பயன்படுத்தி படமாக்கி வருகிறார். மேலும், கணினி கிராபிக்ஸ் (CGI) பயன்பாட்டை முடிந்தவரை குறைத்து, இயற்கையான மற்றும் தத்ரூபமான காட்சிகளை நேரடியாக படமாக்குவதிலேயே அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது கிறிஸ்டோபர் நோலன் தனது 13-வது திரைப்படமான 'தி ஒடிசி' (The Odyssey)-யை இயக்கியுள்ளார். கிரேக்கக் கவிஞர் ஹோமரின் புகழ்பெற்ற 'ஒடிசி' காவியத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இதுவரை அறிவியல் புனைவு மற்றும் த்ரில்லர் கதைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வந்த நோலன், முதல் முறையாக புராணக் கதையை திரைப்படமாக உருவாக்கியிருப்பதால் இந்தப் படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள 'தி ஒடிசி' திரைப்படம் நாளை உலகளவில் வெளியாக உள்ளது. இடம்பெற்றுள்ளன. இதற்கிடையில், இந்த படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், சென்னை மற்றும் கோவையில் அதிகபட்ச டிக்கெட் விலை ரூ.508 மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் தான் டிக்கெட் விலை குறைவாக வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. டெல்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் ரூ.800 முதல் ரூ.3,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறுப்படுகிறது.