சினிமா செய்திகள்

ஏகன் நடிக்கும் “ஹைக்கூ” படத்தின் படப்பிடிப்பு நிறைவு

யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில் உருவாகும் ‘ஹைக்கூ’ படத்தில் ஏகன், பெமினா ஜார்ஜ், ஸ்ரீதேவி அப்பல்லா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்

‘ஜோ’ திரைப்பட தயாரிப்பாளர்களின் மற்றுமொரு தரமான திரைப்படமான நடிகர் ஏகனின் ‘ஹைக்கூ’ படப்பிடிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. இந்தப் படத்தில் ‘ஜோ’, ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ படப் புகழ் ஏகன் கதாநாயகனாக நடிக்க, அவருடன் ‘மின்னல் முரளி’, ‘சேஷம் மைக்கேல் பாத்திமா’ படப் புகழ் பெமினா ஜார்ஜ் மற்றும் ‘கோர்ட்’ திரைப்படத்தில் நடித்த ஸ்ரீதேவி அப்பல்லா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ‘ஜோ’ திரைப்படத்தை இயக்கிய ஹரி ஹரன்ராம் ‘ஹைக்கூ’ படத்திற்கு கூடுதல் திரைக்கதை எழுதுகிறார். யுவராஜ் சின்னசாமி இயக்குகிறார்.

நடிகர் ஏகன் நடிக்கும் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமைகளை படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே நெட்பிலிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். திரையரங்குகளில் படம் வெளியாகும்வரை காத்திருக்காமல் அதற்கு முன்பே டிஜிட்டல் உரிமைகளை நெட்பிலிக்ஸ் வாங்கியிருப்பது கதை மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தியிருக்கிறது.

இந்த திரைப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்திருக்கிறார். பீல் குட் லவ் என்டர்டெய்ன்ராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் டொக்டர் அருளானந்து - மேத்யூ அருளானந்து இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இந்நிலையில், ‘ஹைக்கூ’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து படக்குழு வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளனர்.