சினிமா செய்திகள்

கற்க வேண்டியவை இன்னும் இருப்பதால்தான் இன்றும் உழைத்து கொண்டிருக்கிறேன் - இளையராஜா

இன்னும் எனக்கு இசை தெரியாது, அதனால்தான் உழைக்கிறேன் என்று அஜந்தா எல்லோரா சர்வதேச திரைப்பட விழாவில் இளையராஜா பேசியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் நடைபெற்ற 11-வது அஜந்தா எல்லோரா சர்வதேச திரைப்பட விழாவில், இசைஞானி இளையராஜாவுக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான உயரிய ‘பத்மபாணி விருது’ வழங்கி கவுரவிக்கப்பட்டது. ஆஸ்கார் வெற்றியாளர் ரசூல் பூக்குட்டி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் இந்த விருது வழங்கப்பட்டது.

விழாவில் இளையராஜா “இந்த விழாவிற்கு வருவதற்கு சற்று நேரத்திற்கு முன்புதான் எனது 1,541-வது படத்தின் பின்னணி இசை பணிகளை முடித்துவிட்டு வந்தேன். நிறைய பேர் என்னிடம் எப்படி துல்லியமான பாடல்கள் மற்றும் மெட்டுகளை உருவாக்குகிறீர்கள் எனக் கேட்கிறார்கள். அதற்கு நான் சொல்வது ஒன்றுதான். எனக்கு இன்னும் இசை தெரியாது. ஒருவேளை இசை முழுவதையும் கற்றுக்கொண்டு அதில் தேர்ச்சி பெற்றுவிட்டதாக நான் நினைத்திருந்தால், இந்த நேரம் வீட்டிலேயே முடங்கியிருப்பேன். கற்க வேண்டியவை இன்னும் இருப்பதால் தான் நான் இன்றும் உழைத்து கொண்டிருக்கிறேன்

நான் 1968-ல் இசைப்பயணத்தை தொடங்கியபோது தொழில்நுட்பம் இல்லை. இன்று கணினி மூலம் யார் வேண்டுமானாலும் இசையமைக்கலாம். ஆனால், நேரடி வாத்தியங்கள் தரும் உணர்வை எந்திரங்களால் தர முடியாது. அதனால்தான் இன்றும் நான் ஒவ்வொரு வாத்தியத்திற்கும் தனித்தனியாக குறிப்புகளை எழுதி, நேரடி இசையையே பதிவு செய்கிறேன்” என்றார்.

ஐந்து தசாப்தங்களுக்கும் மேலான தனது இசைப் பயணத்தில், 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு 9000க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். லண்டனில் சிம்பொனி இசை அரங்கேற்றம் செய்து புதிய சாதனை படைத்தார்.

பத்மபாணி விருதை பாடலாசிரியர் ஜாவேத் அக்தர், எழுத்தாளர் சாய் பரஞ்ச்பை, நடிகர் ஓம் பூரி உள்ளிட்டோர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.