அக்னிச் சிறகுகள் படத்தை பற்றி அதன் டைரக்டர் மூடர் கூடம் நவீன் கூறியதாவது:-
அக்னிச் சிறகுகள் படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ஷாலினி பாண்டே நடிக்கிறார். கதாநாயகனுக்கு இணையான மிக முக்கிய கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடிக்கிறார். பிரகாஷ்ராஜ், ஜெகபதி பாபு, சென்றாயன் ஆகியோரும் நடிக்கிறார்கள். நடராஜன் ஷங்கர் இசையமைக்கிறார். கதை-திரைக்கதை-வசனம் எழுதி நான் (நவீன்) இயக்குகிறேன்.
இது, ஒரு திகில் படம். விஜய் ஆண்டனிக்காக எழுதப்பட்ட கதை அல்ல. கதை உருவான பின்னர்தான் இந்த கதாபாத்திரத்துக்கு விஜய் ஆண்டனி மட்டுமே பொருந்துவார் என தோன்றியது. கதை தேர்வு, நடிகர்-நடிகைகள் தேர்வு, படப்பிடிப்புக்கான இடங்கள் தேர்வு ஆகியவற்றில் தயாரிப்பாளர் டி.சிவாவின் பங்களிப்பு அதிகம். இந்த படத்துக்குப்பின், அருண்விஜய் தமிழ் பட உலகில் தனக்கென தனி இடத்தை நிர்ணயம் செய்து கொள்வார்.
தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் படம் தயாராகிறது. படப்பிடிப்பு விரைவில் தொடங்கி கொல்கத்தா, கோவா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடைபெற இருக்கிறது. சண்டை காட்சிகள், வெளிநாடுகளில் படமாக்கப்பட உள்ளன.