திருவண்ணாமலை,
தமிழ் திரையுலகின் பிரபல இயக்குநர்களில் ஒருவரான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனுஷ் நடிப்பில் வெளியான ‘3’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அவர், தொடர்ந்து ‘வை ராஜா வை’, ‘லால் சலாம்’ ஆகிய படங்களை இயக்கினார். இதில் ‘லால் சலாம்’ படத்தில் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கும் நடிகர் தனுஷுக்கும் கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். சுமார் 18 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த இருவரும், கடந்த 2022-ம் ஆண்டு பிரிவதாக அறிவித்தனர். தனிப்பட்ட வாழ்க்கையில் இருவரும் தனித்தனியாகப் பயணித்து வந்தாலும், மகன்களின் நலனுக்காக பெற்றோராக இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்குச் சென்றார். அங்கு சாமி தரிசனம் செய்து வழிபட்டார். கோவிலில் அவர் தனது மகன்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.