சினிமா செய்திகள்

அஜித், நயன்தாரா சினிமாவிலிருந்து காணாமல் போய்விடுவார்கள்... திருப்பூர் சுப்பிரமணியம் கடும் விமர்சனம்

அஜித் மற்றும் நயன்தாரா ஆகியோர் தங்களது திரைப்படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்காதது குறித்து சுப்பிரமணியம் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

நடிகர் அஜித், நடிகை நயன்தாரா ஆகியோர் தாங்கள் நடிக்கும் திரைப்படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்காதது குறித்து திரையரங்க உரிமையாளரும், விநியோகஸ்தருமான திருப்பூர் சுப்பிரமணியம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

புரமோஷனுக்கு வராத முன்னணி நட்சத்திரங்கள்

தமிழ்நாடு மல்டிபிளக்ஸ் தியேட்டர் உரிமையாளர் சங்கத்தின் தலைவராக இருப்பவர் திருப்பூர் சுப்பிரமணியம். இவர் திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, தாராபுரம், கோபி உள்ளிட்ட ஊர்களில் திரையரங்குகளை நடத்தி வருகிறார். இந்நிலையில், தனது திரையரங்கின் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், அஜித் மற்றும் நயன்தாரா ஆகியோர் தங்களது திரைப்படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்காதது குறித்து அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

'தலைக்குமேல் கிரீடம் இருப்பதாக நினைக்கிறார்கள்'

அஜித், நயன்தாரா இருவரும் தாங்கள் நடிக்கும் படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வருவதில்லை என்றும், அவ்வாறு பங்கேற்பதை ஏதோ பெரிய கவுரவக் குறைவாகக் கருதுவதாகவும், தலைக்குமேல் கிரீடம் இருப்பதாக நினைக்கிறார்கள் என திருப்பூர் சுப்பிரமணியம் விமர்சித்துள்ளார். மேலும், திரைப்படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது தங்களுக்குத் தேவையில்லை என்ற மனநிலையில் இருப்பதாகவும் அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

சினிமாவிலிருந்து காணாமல் போகும் நிலை ஏற்படும்!

இதே அணுகுமுறை தொடர்ந்து நீடித்தால், இருவரும் ஒரு கட்டத்தில் சினிமாவிலிருந்து காணாமல் போய்விடும் சூழல் உருவாகலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார். முன்னணி நடிகர்கள் அதிக சம்பளம் பெறும் நிலையில், அவர்களை நம்பி கோடிக்கணக்கில் முதலீடு செய்யும் தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக இருப்பதும் அவசியம். படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்பது தயாரிப்பாளர்களுக்கும், படக்குழுவினருக்கும் அளிக்கும் ஆதரவாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார். திருப்பூர் சுப்பிரமணியத்தின் இந்தக் கருத்துகள் தற்போது திரையுலகில் கவனம் பெற்றுள்ளன.

SCROLL FOR NEXT