சென்னை,
அமலா பால் நடித்துள்ள ‘ஹாஃப்’ திரைப்படம் சர்வதேச அளவில் புதிய கவனத்தை பெற்றுள்ளது. செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் (TIFF) இப்படம் திரையிட தேர்வாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை அமலா பால். வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வரும் இவர், தனது தனித்துவமான நடிப்பால் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியுள்ளார்.
திருமணத்துக்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து சற்று விலகியிருந்த அமலா பால், தற்போது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், இயக்குநர் சம்ஜத் இயக்கியுள்ள ‘ஹாஃப்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ரஞ்சித் சஜீவ், ஐஸ்வர்யா ராஜ், அப்பாஸ் மற்றும் அமலா பால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம், வாம்பயர் ஆக்ஷன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. மலையாளத்தில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் அரபு மொழிகளிலும் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், அமலா பால் நடித்துள்ள ‘ஹாஃப்’ திரைப்படம் சர்வதேச அளவில் புதிய கவனத்தை பெற்றுள்ளது. செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் (TIFF) இப்படம் திரையிட தேர்வாகியுள்ளது.
குறிப்பாக, TIFF-ன் பிரபலமான ‘Midnight Madness’ பிரிவில் ‘ஹாஃப்’ இடம்பெற்றுள்ளது. திகில், ஆக்ஷன் மற்றும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் இந்தப் பிரிவில் இப்படம் தேர்வாகியிருப்பது, படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலையாள சினிமா தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களுடன் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்து வரும் நிலையில், ‘ஹாஃப்’ திரைப்படமும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியிருப்பது குறிப்பிடத்தக்க சாதனையாக பார்க்கப்படுகிறது.