சினிமா செய்திகள்

நெப்போலியன் நடிப்பில் திகில் நகைச்சுவை விருந்தாக 'அமெரிக்க ஆவி’.. விரைவில் திரைக்கு வருகிறது

முழுக்க முழுக்க அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட முதல் தமிழ் படம் இதுவாகும்.

சென்னை,

"சிறுவர் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பினரும் இப்படத்தை கொண்டாடுவது நிச்சயம். விரைவில் தியேட்டர்களில் சிரிப்பும், திகிலும் கலந்த விருந்து காத்திருக்கிறது. ரசிகர்கள் இந்த படத்தை ஆதரித்து வெற்றிபெற செய்யவேண்டும்", என்று நெப்போலியன் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசினார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்த நெப்போலியன், ஒரு கட்டத்தில் அரசியலில் இணைந்தார். மத்திய இணை மந்திரியாகவும் பதவி வகித்தார். பின்னர் தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் வசிக்கத் தொடங்கிய நெப்போலியன், அங்கு தொழில் அதிபராகவும் திகழ்ந்து வருகிறார். இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு 'அமெரிக்க ஆவி' என்ற புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

தஞ்சை ஜே.பி.ஆர். இயக்கிய படம்

தஞ்சை ஜே.பி.ஆர். இயக்கியுள்ள இந்தப்படத்தை ஜீவன் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் நெப்போலியன், குணால் நெப்போலியன் தயாரிக்கிறார்கள். ஊர்வசி, அர்லோ, ஐஸ்வர்யா, ரவி, பிரகாஷ், ஸ்டான்லி, ராகுல், வெங்கி, அருணாசலம், பார்வதி, இந்து, மைதிலி, ராஜ்குமார், வெங்கட், பிரேமா, டியான், மகேஷ், ஜோசுவா, சாம் ஆண்டோ, அருண் ஆண்டனி, பப்ளூ சாக்கோ, அருள் முருகன், வசந்த், சாட், ஜான் லூயிஷ், விவேக், கார்த்தி, லிஜோ, ரேஷ்மா, அர்விந்த், மீனூ, ஜான் இக்னேடியஸ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் விக்னேஷ், பெசன்ட்நகர் ரவி, தனுஷ் நெப்போலியன், அக்சயா தனுஷ் ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள்.

காமெடி ஹாரர் கதையில் 'அமெரிக்க ஆவி' படம்

விரைவில் திரைக்கு வரவிருக்கும் 'அமெரிக்க ஆவி' திரைப்படம் காமெடி ஹாரர் படமாக உருவாகி உள்ளது. முழுக்க முழுக்க. அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படமான இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் விரைவில் திரைக்கு வருகிறது. படத்தின் டிரெய்லர் இசை வெளியீடு சென்னை கமலா திரையரங்கில் வெளியானது. ஜப்பான் நாட்டின் துணை தூதரான டாக்கா ஹாசி மற்றும் தயாரிப்பாளர் ஆதித்யா ராம் ஆகியோர் இணைந்து இசைத்தட்டை வெளியிட, தயாரிப்பாளர் கண்ணன் ரவி பெற்றுக்கொண்டார். விழாவில் படக் குழுவினருடன் தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படம்- நெப்போலியன்

விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படம் குறித்து நெப்போலியன் கூறும்போது, "இதுவரை படப்பிடிப்பை பார்க்காதவர்கள் எல்லாம் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். சிவாஜி நடித்த 'பாரதவிலாஸ்' படத்தில் இந்தியாவில் உள்ள அனைவருமே நடித்திருப்பார்கள். இதில் உலகம் முழுவதிலும் உள்ளவர்கள் நடித்திருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் கிடைத்த ஓய்வு நேரத்தில் படப்பிடிப்பை நடத்தி 75 நாட்களில் இந்தப் படத்தை முடித்திருக்கிறோம். அனைத்து தரப்பினரும் ரசித்து சிரித்து மகிழும்படியான ஒரு பொழுதுபோக்கு படமாக இந்தப்படம் இருக்கும்.

இந்த படத்துக்கு ஆதிஷ் உத்ரியன் இசையமைத்துள்ளார். 'நேஷ்வில்' பிரபு ஒளிப்பதிவு செய்துள்ளார். எடிட்டிங் வினு, கலை இந்து ராஜ்குமார். இப்படி நல்ல தொழில்நுட்ப குழுவினரும் படத்தில் இருக்கிறார்கள். ஒட்டுமொத்த படக்குழுவினரின் நேர்த்தியான நடிப்பு, கடின உழைப்பு காரணம் படம் எதிர்பார்ப்பை காட்டிலும் சிறப்பாகவே தயாராகி இருக்கிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பினரும் இப்படத்தை கொண்டாடுவது நிச்சயம். விரைவில் தியேட்டர்களில் சிரிப்பும், திகிலும் கலந்த விருந்து காத்திருக்கிறது. ரசிகர்கள் இந்த படத்தை ஆதரித்து வெற்றிபெற செய்யவேண்டும்", என்றார்.

தயாரிப்பாளர் குணால் நெப்போலியன் பேசுகையில், "இது வேற மாதிரியான படம். முழுவதும் அமெரிக்காவில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் இதுவாகும். இந்த படத்தில் பேயும், பிசாசும் இருக்கிறது. அத்துடன் சுவாரசியமான பல விஷயங்களும் இருக்கின்றன. அனைவரும் குடும்பத்துடன் திரையரங்கத்திற்கு வருகை தந்து மகிழ்ச்சியுடன் கண்டு ரசிக்க வேண்டும்”, என்றார்.

SCROLL FOR NEXT