சினிமா செய்திகள்

திகிலும் நகைச்சுவையும் கலந்த 'அமெரிக்க ஆவி' - டிசம்பரில் உலகம் முழுவதும் வெளியீடு!

ஜீவன் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் நெப்போலியன், குணால் நெப்போலியன் ஆகியோரின் தயாரிப்பில் உருவாகி உள்ள இந்த படத்தை தஞ்சை ஜே.பி.ஆர். இயக்கி உள்ளார்.

நட்சத்திர பட்டாளத்துடன் 'அமெரிக்க ஆவி’

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நெப்போலியன், தற்போது அமெரிக்க ஆவி என்ற புதிய படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். ஜீவன் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் நெப்போலியன், குணால் நெப்போலியன் ஆகியோரின் தயாரிப்பில் உருவாகி உள்ள இந்த படத்தை தஞ்சை ஜே.பி.ஆர். இயக்கி உள்ளார். இதில் நெப்போலியன் முதன்மை வேடத்தில் நடித்து இருக்கிறார். ஊர்வசி, அர்லோ, ஐஸ்வர்யா, ரவி, பிரகாஷ், ஸ்டான்லி, ராகுல், வெங்கி, அருணாசலம், பார்வதி, இந்து, மைதிலி, ராஜ்குமார், வெங்கட், பிரேமா, டியான், மகேஷ், ஜோசுவா, சாம் ஆண்டோ, அருண் ஆண்டனி, பப்ளூ சாக்கோ, அருள் முருகன், வசந்த், சாட், ஜான் லூயிஷ், விவேக், கார்த்தி, லிஜோ, ரேஷ்மா, அர்விந்த், மீனூ, ஜான் இக்னேடி யஸ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மீண்டும் களமிறங்கிய நெப்போலியன்

இவர்களுடன் விக்னேஷ், பெசன்ட்நகர் ரவி, தனுஷ் நெப்போலியன், அக்சயா தனுஷ் ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்துக்கு ஆதிஷ் உத்ரியன் இசையமைத்துள்ளார். 'நேஷ்வில்' பிரபு ஒளிப்பதிவு செய்துள்ளார். அடுத்த மாதம் (டிசம்பர்) திரைக்கு வரவிருக்கும் இந்த திரைப்படம் குறித்து படக்குழுவினர் கூறியதாவது:-

நீண்ட இடைவெளிக்குப் பிறகு திகிலும் நகைச்சுவையும் கலந்த வித்தியாசமான ஹாரர் காமெடி திரைப்படமான 'அமெரிக்க ஆவி' மூலம் மீண்டும் களமிறங்கி உள்ளார் நெப்போலியன். அமெரிக்க மண்ணில் படமாக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படம், தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

முழுப் படப்பிடிப்பும் அமெரிக்காவிலேயே

'அமெரிக்க ஆவி' படத்தின் மிக முக்கியமான சிறப்பம்சம், முழுப் படப்பிடிப்பும் அமெரிக்காவிலேயே நடைபெற்றிருப்பது தான். அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. பேய்கள், ஆவிகள் என்றாலே பயமுறுத்தும் காட்சிகள்தான் நினைவுக்கு வரும். ஆனால், இப்படத்தில் பயத்துடன், சிரிப்பையும் இணைத்து ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்க உள்ளனர். குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கும் வகையில் நகைச்சுவை கலந்த ஹாரர் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. படத்தின் கதைக்களம், ஆவி தொடர்பான மர்மங்கள் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் ரசிகர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. தமிழ் ரசிகர்களை மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மொழி ரசிகர்களையும் சென்றடையும் வகையில் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.

ரசிகர்களுக்கு விருந்தாகும் ஹாரர் காமெடி படம்

ஜப்பான் நாட்டின் துணை தூதர் டாக்கா ஹாசி வெளியிட்ட படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் 'அமெரிக்க ஆவி' திரைப்படம் அடுத்த மாதம் (டிசம்பர்) உலகம் முழுவதும் அதிகமான தியேட்டர்களில் திரைக்கு வருகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு நெப்போலியன் நடிப்பில் வெளியாகவுள்ள 'அமெரிக்க ஆவி' திரைப்படம், அவரது ரசிகர்களுக்கு மட்டுமின்றி ஹாரர் காமெடி திரைப்படங்களை விரும்பும் ரசிகர்களுக்கும் புதிய விருந்தாக அமையும். இந்தப்படம் பயமுறுத்தவும் போகிறது. அதேவேளை சிரிக்க வைக்கவும் போகிறது”, என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் இப்படம் உருவாகி இருப்பதாக நெப்போலியன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறும் போது, அமெரிக்க ஆவி' திரைப்படத்தில் என்னோடு சுமார் 200 பேர் புதுமுகமாக அறிமுகமாகி இருக்கிறார்கள். சினிமா என்றால் என்னவென்றே அறியாத இவர்களை, நானும் இயக்குநரும் சேர்ந்து பயிற்சி அளித்து நடிக்க வைத்துள்ளோம். ஏறத்தாழ 40-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் மிகவும் வித்தியாசமான படம். பொழுதுபோக்காகவும் இருக்கும், என்றார்.

SCROLL FOR NEXT