மும்பை,
துரதிர்ஷ்டவசமாக எனது கையில் தற்போது கடுமையான வலியும், அசவுகரியமும் ஏற்பட்டுள்ளது. இதனால் உங்களுக்கு கடிதம் எழுதுவதில் பெரும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்காக உங்களிடம் நான் இருகரம் கூப்பி, மனமாற மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். என அமிதாப் பச்சன் பதிவிட்டுள்ளார்.
நடிகர் அமிதாப் பச்சன், தற்போது தனக்கு ஏற்பட்டுள்ள உடல்நலக்குறைவு மற்றும் கையில் ஏற்பட்டுள்ள கடுமையான வலி குறித்து முதல்முறையாக மனம் திறந்துள்ளார். மேலும், ரசிகர்களிடம் அவர் உருக்கமாக மன்னிப்பும் கேட்டுள்ளார். இது குறித்து அமிதாப் பச்சன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:-
"தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதிலும் உள்ள எனது லட்சக்கணக்கான ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளிடம் இருந்து ஏராளமான வாழ்த்துக்களும், விதவிதமான பரிசுகளும் குவிந்தவண்ணம் உள்ளன. அவற்றை வைப்பதற்குக்கூட எனது வீட்டில் இடம் இல்லாத அளவுக்கு அன்பால் திணறடித்து வருகிறார்கள். இந்த பரிசுகளை நான் முறையாக பாதுகாக்கவில்லை என்றால், அது அவர்களின் தூய்மையான அன்பை அவமதிப்பதாகிவிடும்.
எனவே, அன்புப் பரிசுகளை அனுப்பிய அனைவருக்கும் எனது மன மார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்பு காட்டிய ரசிகர்களுக்கு நானே நேரடியாக கடிதம் எழுதி பதில் அனுப்ப விரும்பினேன். ஆனால், துரதிர்ஷ்டவசமாக எனது கையில் தற்போது கடுமையான வலியும், அசவுகரியமும் ஏற்பட்டுள்ளது. இதனால் உங்களுக்கு கடிதம் எழுதுவதில் பெரும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்காக உங்களிடம் நான் இருகரம் கூப்பி, மனமாற மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.
சமீப நாட்களாக நான் அடிக்கடி 'மன்னிப்பு' என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்தி வருகிறேன். சூழ்நிலை அப்படி அமைந்துவிட்டது, என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. மன்னிப்பு கேட்பதில் எந்த தவறும் இல்லை. சூழ்நிலைகள் அப்படி மாறும்போது மன்னிப்பு தேடுவதுதான் நல்லது. அதை ஏற்பதும், மறுப்பதும் உங்கள் கையில் உள்ளது. நீங்கள் என்னை புரிந்து கொண்டு மன்னித்துவிட்டால் என் இதயம் மகிழ்ச்சியடையும்." இவ்வாறு அமிதாப் பச்சன் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.