சினிமா செய்திகள்

குண்டு துளைக்காத கண்ணாடி பாதுகாப்புடன் வந்து ரசிகர்களை சந்தித்த அமிதாப்பச்சன்

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், மும்பையில் உள்ள தனது வீட்டின் முன்பு ரசிகர்களைச் சந்தித்தபோது, இந்த முறை குண்டு துளைக்காத கண்ணாடி தடுப்புக்குப் பின்னால் நின்று கையசைத்தார்.

மும்பை,

நடிகர் அமிதாப் பச்சன் ரசிகர்களைச் சந்திக்க நின்றிருந்த மேடையின் மூன்று பக்கங்களிலும் குண்டு துளைக்காத கண்ணாடித் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.

குண்டு துளைக்காத கண்ணாடி

மும்பையின் ஜூஹு பகுதியில் உள்ள தனது வீட்டின் முன்பு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அமிதாப் பச்சன் ரசிகர்களைச் சந்திப்பது வழக்கம். பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் இந்த வழக்கத்தின்படி, நேற்றும் ரசிகர்களைச் சந்தித்தார். ஆனால், இந்த முறை அவரது பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டிருந்தன. அவர் ரசிகர்களைச் சந்திக்க நின்றிருந்த மேடையின் மூன்று பக்கங்களிலும் குண்டு துளைக்காத கண்ணாடித் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.

பாதுகாப்பு அதிகரிக்க என்ன காரணம்?

கடந்த அக்டோபர் 18-ம் தேதி நடிகர் டைகர் ஷெராப் மீது மும்பையின் ஜூஹு பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அவர் காரில் சென்றுகொண்டிருந்தபோது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் டைகர் ஷெராப் காயமின்றி தப்பினார். ஆனால், அவரது கார் ஓட்டுநர் மற்றும் பொதுமக்களில் ஒருவர் காயமடைந்தனர். இதற்கிடையே, கடந்த அக்டோபர் 23-ம் தேதி மும்பை மேயர் ரித்து தவாடேவுக்கு வந்த மின்னஞ்சலில், அமிதாப் பச்சனின் வீடு உள்ளிட்ட சில இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

அமிதாப் பச்சனின் வீட்டில் அக்டோபர் 31 முதல் நவம்பர் 27-ம் தேதிக்குள் தாக்குதல் நடத்தப்படும் என்றும் அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, அமிதாப் பச்சனின் வீட்டைச் சுற்றி பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டன. இந்நிலையில், ரசிகர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சியில் அமிதாப் பச்சன் குண்டு துளைக்காத கண்ணாடித் தடுப்புக்குப் பின்னால் நின்றார். இருப்பினும், இந்த பாதுகாப்பு ஏற்பாடு அரசு சார்பில் செய்யப்பட்டதா அல்லது அமிதாப் பச்சனின் சொந்த முடிவா என்பது குறித்து தெளிவான தகவல் வெளியாகவில்லை.

SCROLL FOR NEXT