சினிமா செய்திகள்

சென்னை; போதைப்பொருள் வழக்கில் நடிகைகள் கைது; சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்

சென்னை வளசரவாக்கத்தில் போதைப்பொருள் வைத்திருந்த நடிகை, துணை நடிகை உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை,

சென்னை வளசரவாக்கம் பகுதியில் தடை செய்யப்பட்ட மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பயன்படுத்தப்படுவதாக வந்த தகவலின்பேரில் போதை தடுப்பு பிரிவு போலீசார், நெசப்பாக்கத்தை சேர்ந்த விக்னேஸ்வரன் (வயது 35) என்ற வாலிபரை கைது செய்து விசாரித்தனர். அவரிடம் இருந்து மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் கொடுத்த தகவலின் பேரில் வெங்கடேஷ் குமார் (31) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். 2 பேரிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். விசாரணையில் இந்த வழக்கில் திரைப்பட நடிகை மற்றும் துணை நடிகை ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட 2 பேரும் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போதைப்பொருள் வைத்திருந்த திரைப்பட நடிகை அஞ்சு கிருஷ்ணா (30), துணை நடிகை வின்சி என்ற நிவேதா (26) மற்றும் இவர்களது நண்பர்களான கார்த்திக் ராஜா (31), யஸ்வந்த் (24), ஸ்ரீராம் (32), ஆல்வின் (26), தமிம் நிஸ்வான் (27) ஆகிய மேலும் 7 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான 9 பேரிடம் இருந்தும் மெத்தபெட்டமைன் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் மற்றும் இதனை புகைப்பதற்காக பயன்படுத்தப்படும் மெஷின்கள், விலை உயர்ந்த செல்போன்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

கைதான 2 பேரும் பெங்களூருவில் இருந்து போதைப்பொருளை கடத்தி வந்து இந்த பகுதிகளில் விற்பனை செய்து வந்தனர். இவர்களிடம் இருந்து நடிகை, துணை நடிகை மற்றும் அவரது நண்பர்கள் போதைப்பொருளை வாங்கி பயன்படுத்தி உள்ளனர். இதற்காக நடிகை வீட்டிலேயே போதைப்பொருளை பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது.

இந்த சம்பவத்தில் மேலும் யாருக்காவது தொடர்பு உள்ளதா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். கைதான நடிகை, ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பதும், மற்றொருவர் திரைப்படங்களில் துணை நடிகையாக இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. தனிப்படை போலீசாரை சென்னை போலீஸ் கமிஷனர் அருண் பாராட்டினார்.

SCROLL FOR NEXT