சினிமா செய்திகள்

குறைந்த பட்ஜெட்டில் பிரம்மாண்ட முயற்சி... ‘டெத் இரயில்வே’ படக்குழுவுக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு

‘டெத் இரயில்வே’ படத்தின் டைட்டில் டீசரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்து படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

‘குறைந்த பட்ஜெட்டில் சரியான பார்வையும் திட்டமிடலும் இருந்தால் என்ன சாதிக்க முடியும் என்பதை நிரூபித்த ‘யாத்திசை’ படக்குழு, இரண்டாம் உலகப் போர் காலத்தில் நடைபெறும் கதையுடன் ‘டெத் ரயில்வே’ மூலம் மீண்டும் வந்துள்ளது. இந்தப் படம் அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும் என்று நம்புகிறேன்’ எனப் பாராட்டியுள்ளார்.

தரணி ராசேந்திரன் இயக்கத்தில் ‘டெத் இரயில்வே’

‘யாத்திசை’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டெத் இரயில்வே’. ஜே. கமலகண்ணன் தயாரித்துள்ள இப்படத்தில் சசிகுமார், சமுத்திரக்கனி, பவானி ஸ்ரீ, கிஷோர், சிவதா, சேயோன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நடிகர் அசோக் செல்வன் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு சேது முருகவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். சார்தக் கல்யாணி இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இரண்டாம் உலகப் போர் பின்னணியில் கதை

1944-ம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் உலகப் போரின் பின்னணியில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. ஜப்பான் ராணுவம் இந்தியாவுக்குள் நுழைவதற்கான முயற்சியில், பர்மா - தாய்லாந்து இடையே ரயில் பாதை அமைக்கப்பட்ட வரலாற்றுச் சம்பவங்களை மையமாகக் கொண்டு ‘டெத் ரயில்வே’ உருவாகியுள்ளது.

போர்க்காலத்தில் நடைபெற்ற சம்பவங்களையும், அந்த ரயில் பாதை அமைப்பின்போது நிகழ்ந்த துயரங்களையும் மையப்படுத்தி இப்படம் தயாராகியுள்ளது. வெளியான டைட்டில் டீசரில் இடம்பெற்றுள்ள போர்க்கால காட்சிகளும், படத்தின் உருவாக்கமும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. வரலாற்றுச் சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சிவகார்த்திகேயன் பாராட்டு

இந்த நிலையில், இப்படத்தின் டைட்டில் டீசரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்து படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ‘குறைந்த பட்ஜெட்டில் சரியான பார்வையும் திட்டமிடலும் இருந்தால் என்ன சாதிக்க முடியும் என்பதை நிரூபித்த ‘யாத்திசை’ படக்குழு, இரண்டாம் உலகப் போர் காலத்தில் நடைபெறும் கதையுடன் ‘டெத் ரயில்வே’ மூலம் மீண்டும் வந்துள்ளது. இந்தப் படம் அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும் என்று நம்புகிறேன்’ எனப் பாராட்டியுள்ளார்.

SCROLL FOR NEXT