கன்னியாகுமரி,
படத்தின் விளம்பரத்திற்காகப் பல்வேறு புதுமையான முயற்சிகளை மேற்கொண்டு வரும் படக்குழுவினர், தற்போது ‘துரோகம் பழகு’ படத்தின் போஸ்டரை மாத்தூர் தொட்டிப்பாலத்தில் பறக்கவிட்டு கவனம் ஈர்த்துள்ளனர்.
மகிழ் புரொடக்ஷன்ஸ் சார்பில் பியூலா மகிழ் தயாரிப்பில், சீயோன் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘துரோகம் பழகு’. இப்படத்தில் தக்ஷன் விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார். ஜி.எம்.குமார், வனிதா விஜயகுமார், லொள்ளு சபா ஜீவா, வாழை ஜானகி, அமுதவாணன், அப்புக்குட்டி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பொதுவாகப் புதிய திரைப்படங்களின் முதல் பார்வை (ஃபர்ஸ்ட் லுக்) போஸ்டர்கள் இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிடப்படுவது வழக்கம். ஆனால், இந்த வழக்கமான முறையிலிருந்து மாறுபட்டு, ‘துரோகம் பழகு’ படக்குழுவினர் நூதனமான விளம்பர முயற்சியில் இறங்கியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான மாத்தூர் தொட்டிப்பாலத்தில், ‘துரோகம் பழகு’ படத்தின் போஸ்டரைப் பறக்கவிட்டு வெளியிட்டுள்ளனர். ஆசியாவின் புகழ்பெற்ற தொட்டிப்பாலங்களில் ஒன்றாகக் கருதப்படும் இப்பாலத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த விளம்பர முயற்சி, படத்தின் மீதான கவனத்தை ஈர்த்துள்ளது.
இதற்கு முன்பும் புதுச்சேரி கடலுக்கு நடுவே இப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு படக்குழுவினர் வித்தியாசமான முறையில் விளம்பரம் செய்திருந்தனர். தொடர்ந்து, வழக்கத்திற்கு மாறான விளம்பர உத்திகளைக் கையாண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
படத்தின் போஸ்டரை வித்தியாசமான முறையில் வெளியிட்டுள்ள படக்குழுவினர், அடுத்ததாக டிரெய்லரையும் புதுமையான முறையில் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், ‘துரோகம் பழகு’ திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. போஸ்டர் வெளியீட்டிலேயே வித்தியாசத்தைக் காட்டியுள்ள இப்படக்குழுவினர், டிரெய்லர் வெளியீட்டில் என்ன புதுமையைச் செய்யப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.