அமராவதி,
பவர் ஸ்டார் பவன் கல்யாண் அரசியல்வாதியும், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரும் ஆவார். இவர் தெலுங்கு சினிமாவில் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார்.ஆந்திர மாறில சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று துணை முதல்வராகவும் பொறுப்பில் உள்ளார்.
துணை முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு சில மாதங்களாக சினிமாவில் நடிப்பதை நிறுத்தி வைத்திருந்தார் பின்னர் தயாரிப்பாளர்களின் நிலையை கருத்தில் கொண்டு ஹரிஹர வீர மல்லு, ஓஜி ஆகிய படங்களில் நடித்திருந்தார். ‘ஓஜி’ படம் ரூ.350 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. சமீபத்தில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான ‘உஸ்தாத் பகத் சிங்’ படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. பவன், தற்போது இயக்குனர் சுரேந்தர் ரெட்டியின் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் திரைப்படங்களில் நடிப்பதைத் தடை செய்யக் கோரி ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி விஜயகுமார் வழக்கு தொடர்ந்திருந்தார். பவன் கல்யாண் தனது ‘ஹரி ஹர வீர மல்லு’ திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் போது அரசு இயந்திரத்தையும் தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் திரைப்படங்களில் நடிப்பதைத் தடை செய்யக் கோரிய மனுவை ஆந்திர ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
அரசியல்வாதியோ அல்லது பொதுப் பதவியில் இருப்பவரோ திரைப்படங்களில் நடிப்பதற்கு அரசியலமைப்பு ரீதியாக எந்தத் தடையும் இல்லை என்றும் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க மனுதாரர் எந்த ஆதாரத்தையும் வழங்க வில்லை என்றும் நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.