தனியிசை துறையில் ராப் பாடகராக அறிமுகமானவர் ஹிப் ஹாப் ஆதி. திரைத் துறையில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருகிறார். இவரின் பாடல்களுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. தனி ஒருவன், ஆம்பள, அரண்மனை உள்ளிட்ட படங்களுக்கு இவர் இசையமைத்து உள்ளார். மீசையை முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால், சிவகுமாரின் சபதம், அன்பறிவு ஆகிய படங்களில் நடித்தும் இருக்கிறார்.
இசையமைப்பாளராகத் தன்னை அறிமுகப்படுத்திய ஹிப் ஹாப் தமிழா ஆதி, கடந்த 2017 ஆம் வெளியான மீசையை முறுக்கு படத்தின் மூலம் தன்னை நடிகராகவும், இயக்குனராகவும் அறிமுகப்படுத்தி கொண்டார். கல்லூரி மாணவனின் கனவு, காதல், வாழ்க்கைப் போராட்டங்களை எளிமையாக சொல்லிய இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ஆத்மிகா, விவேக், ஆர்ஜே விக்னேஷ்காந்த் மற்றும் விஜயலட்சுமி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர்.
முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் பாகமான மீசையை முறுக்கு 2 படத்தினை இயக்க உள்ளதாக ஆதி தெரிவித்தார். சுந்தர் சி- குஷ்பு தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ஹிப்ஹாப் ஆதி இன்று தனது 36வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு மீசையை முறுக்கு 2 படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்ட உள்ளதாக அறிவித்துள்ளனர். அதன்படி, இன்று மாலை 6 மணிக்கு படத்தின் டீசர் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.