சினிமா செய்திகள்

அனுராக் காஷ்யப்பின் “பான்டர்” டிரெய்லர் வெளியானது

அனுராக் காஷ்யப் இயக்கத்தில் பாபி தியோல், சபா ஆசாத் நடித்துள்ள ‘பான்டர்’ படம் ஜூன் 5ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்தி திரையுலகில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் அனுராக் காஷ்யப். அனுராக் காஷ்யப் தமிழில் கடந்த 2018-ம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான 'இமைக்கா நொடிகள்' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார். இந்த படத்தில் இவரின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. அதனை தொடர்ந்து சமீபத்தில் வெளியான 'லியோ' படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 'மகாராஜா' படத்தில் கொடூரமான வில்லனாக நடித்து அசத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. மலையாளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள 'ரைபில் கிளப்' படத்திலும் நடித்துள்ளார். வெற்றிமாறனின் 'விடுதலை 2' படத்திலும் நடித்துள்ளார். அனுராக் கஷ்யப். தரமான படங்களை இயக்கியும் தனது படங்களை வெளியிட பல சவால்களை சந்தித்து வந்த அனுராக் காஷ்யப் தென் இந்திய சினிமா பக்கம் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். இவர் தனது இயக்கம் மற்றும் திரைக்கதைக்கென 4 பிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ளார்.

தேவ் டி அக்லி, பாஞ்ச், பிளாக் ப்ரைடே, கேங்ஸ் ஆப் வாஸீப்பூர் உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியவர் அனுராக் கஷ்யப். இவரது பல படங்கள் திரையரங்கில் வெளியாவதற்கு முன்பாகவே தடை செய்யப்பட்டுள்ளன. இரண்டு பாகங்களாக இவர் இயக்கிய கேங்ஸ் ஆப் வாஸீப்பூர் உலகம் முழுவதிலும் உள்ள சினிமா ரசிகர்களை கவர்ந்த திரைப்படம். பாலிவுட் சினிமாவையும் பாலிவுட் நடிகர்களின் மீதும் தொடர்ச்சியாக விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் . இவரின் ‘கென்னடி’ படமும் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை.

தற்போது அனுராக் காஷ்யப் இயக்கியுள்ள ‘பான்டர்’ ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இப்படத்தில் பாபி தியோல், சபா ஆசாத், சன்யா மல்ஹோத்ரா, சப்னா, இந்திரஜித் சுகுமாரன், ராஜ் பி ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். புகழை இழந்து கொண்டிருக்கும் ஒரு டிவி நடிகர், அவரின் முன்னாள் காதலியால் ஒரு பிரச்னையில் சிக்கிக் கொள்வதும், பின்னர் அதிலிருந்து தப்பிக்க எடுக்கும் சட்டப் போராட்டங்களுமே கதை.இப்படத்தின் டீசர் கடந்த மே 7ம் தேதி வெளியானது. இப்படம் டொரண்டோ திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியிருந்தது.

இந்நிலையில், ‘பான்டர்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இப்படம் ஜூன் 5ம் தேதி வெளியாகவுள்ளது.