சென்னை,
வித்தியாசமான நகைச்சுவைக் காட்சிகளுடன் வெளியாகியுள்ள இந்த டிரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. ஏ.ஆர்.ரகுமான் – பிரபுதேவா கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் நடன இயக்குநர் பிரபுதேவா கூட்டணியில் வெளியான பாடல்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. 1994-ம் ஆண்டு வெளியான ‘காதலன்’ திரைப்படத்தின் மூலம் இவர்கள் முதன்முறையாக இணைந்தனர்.
தொடர்ந்து ‘லவ் பேர்ட்ஸ்’, ‘மிஸ்டர் ரோமியோ’, ‘மின்சார கனவு’ உள்ளிட்ட படங்களில் இவர்களது கூட்டணி தொடர்ந்தது. இந்தப் படங்களில் இடம்பெற்ற ‘முக்காலா முக்காபுலா’, ‘ஊர்வசி ஊர்வசி’ உள்ளிட்ட பாடல்கள் இசைக்காகவும், பிரபுதேவாவின் நடனத்திற்காகவும் பெரும் வரவேற்பைப் பெற்றன.
இந்த நிலையில், சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஏ.ஆர்.ரகுமான் – பிரபுதேவா கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. ‘மூன்வாக்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் இயக்கியுள்ளார்.
முழுநீள நகைச்சுவைப் படமாக உருவாகியுள்ள இதில் பிரபுதேவா, ஏ.ஆர்.ரகுமான், யோகி பாபு, அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன், ரெடின் கிங்ஸ்லி, ராஜேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். மேலும், இப்படத்தின் மூலம் அவர் நடிகராகவும் அறிமுகமாகிறார்.
பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் உலகளாவிய திரையரங்க வெளியீட்டு உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ‘மூன்வாக்’ திரைப்படம் வரும் டிசம்பர் 24-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், ‘மூன்வாக்’ படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. வித்தியாசமான நகைச்சுவைக் காட்சிகளுடன் வெளியாகியுள்ள இந்த டிரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. ஏ.ஆர்.ரகுமான் – பிரபுதேவா கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.