சினிமா செய்திகள்

'ராமாயணா' படத்திற்காக 12 பட வாய்ப்புகளை நிராகரித்த ஏ.ஆர்.ரகுமான்

இப்படத்திற்கு ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், ஜெர்மனியைச் சேர்ந்த புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மருடன் இணைந்து இசையமைத்துள்ளார்.

கோவா,

இந்தப் படத்திற்காக என்னை முழுமையாக அர்ப்பணிக்க வேண்டியிருந்ததால், சுமார் 10 முதல் 12 திரைப்பட வாய்ப்புகளை நிராகரித்தேன் என ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.

ரன்பீர் கபூர் நடிப்பில், இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் 'ராமாயணா'. இப்படத்தில் சீதையாக சாய் பல்லவியும், ராவணனாக யாஷும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், ஜெர்மனியைச் சேர்ந்த புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மருடன் இணைந்து இசையமைத்துள்ளார். கடந்த 5ந் தேதி வெளியான இந்த படம் கிட்டத்தட்ட 1000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

மூன்று ஆண்டுகளாக இசைப் பணி

இப்படத்தின் இசைக்காக கடந்த மூன்று ஆண்டுகளாகப் பணியாற்றியதாக நிகழ்ச்சி ஒன்றில் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார். அதாவது, கோவாவில் நடைபெற்ற இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI), இயக்குனர் பாரத் பாலா உருவாக்கிய 'பனாரஸ்' திரைப்படத்தின் திரையிடலுக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

12 பட வாய்ப்புகளை நிராகரித்தேன்

அப்போது பேசிய ரகுமான், 'ராமாயணா' படத்தின் இசை மற்றும் கதாபாத்திரங்களுக்கான இசைக்கோர்வைகளை உருவாக்குவதில் நீண்ட காலம் செலவிட்டதாகக் குறிப்பிட்டார். மேலும், "ராமாயணா படத்திற்காக கடந்த மூன்று ஆண்டுகளாக இசையமைத்து வருகிறோம். சில இசைக்கோர்வைகள் 12 முதல் 13 முறை மாற்றி அமைக்கப்பட்டன. குறிப்பாக, 'ராவண தாண்டவம்' இசைக்கோர்வையை இறுதி செய்வதற்கு முன்பு 12 முதல் 13 வெவ்வேறு வடிவங்களில் உருவாக்கினோம். இறுதியில் அனைவருக்கும் பிடித்தமான இசை வடிவம் கிடைத்தது.

இந்தப் படத்திற்காக என்னை முழுமையாக அர்ப்பணிக்க வேண்டியிருந்ததால், சுமார் 10 முதல் 12 திரைப்பட வாய்ப்புகளை நிராகரித்தேன். பல முக்கியமான பெரிய இயக்குனர்களின் படங்களிலும் பணியாற்ற முடியாமல் போனது. இருப்பினும், அதற்காக நான் பெருமைப்படுகிறேன்" என்றார்.

பிடித்தமான படங்களை மட்டுமே தேர்வு செய்கிறேன்

தொடர்ந்து, படங்களைத் தேர்வு செய்வது குறித்துப் பேசிய அவர், ஒரு திரைப்படத்தின் மீது தனக்கு உண்மையான ஈடுபாடு ஏற்படும்போது மட்டுமே இசையமைக்க ஒப்புக்கொள்வதாகத் தெரிவித்தார். அந்தப் பணி தனது கலை உணர்வுக்கு ஊக்கமளிப்பதுடன், தன்னுடன் பணியாற்றும் குழுவினருக்கும் உற்சாகத்தை அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். 'ராமாயணா' படத்திற்காக பல பட வாய்ப்புகளைத் தவிர்த்து மூன்று ஆண்டுகள் உழைத்திருப்பதாக ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்திருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

SCROLL FOR NEXT