சென்னை,
இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் கட்டணம் ரூ.2,499 முதல் ரூ.1.5 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருந்த நிலையில், நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்களுக்கு முழுத் தொகையையும் திரும்ப வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் அவ்வப்போது பல்வேறு நாடுகள் மற்றும் நகரங்களில் நேரடி இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அந்த வகையில், 'வண்டர்மென்ட் டூர்' (Wonderment Tour) என்ற பெயரில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக, அரியானா மாநிலம் குர்கானில் உள்ள பேக்யார்ட் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் வரும் நவம்பர் 21-ம் தேதி ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் டிக்கெட்டுகளையும் முன்பதிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில், தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் மற்றும் கடைசி நேரத்தில் ஏற்பட்ட சில முக்கியமான மாற்றங்கள் காரணமாக, இந்த இசை நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். மேலும், இந்த நிகழ்ச்சி அடுத்த ஆண்டு (2027) நடைபெறும் என்றும், அதற்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இசை நிகழ்ச்சியைக் காண ஆவலுடன் காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இந்த இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் கட்டணம் ரூ.2,499 முதல் ரூ.1.5 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருந்த நிலையில், நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்களுக்கு முழுத் தொகையையும் திரும்ப வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே முன்பதிவு செய்த ரசிகர்களுக்கு டிக்கெட் ரத்து தொடர்பான மின்னஞ்சல்களும் அனுப்பப்பட்டுள்ளன. புதிய தேதி அறிவிக்கப்படும் வரை ரசிகர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.