சினிமா செய்திகள்

`அரசன்' கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்படவில்லை - ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் பேச்சு

வடசென்னை பின்னணியில் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

சென்னை,

சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன், 'அரசன்' படத்தின் கிளைமாக்ஸ் காட்சி குறித்து பேசியுள்ளார்.

'அரசன்' திரைப்படம்

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் (எஸ்.டி.ஆர்.) நடித்து வரும் திரைப்படம் 'அரசன்'. வடசென்னை பின்னணியில் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், ஆண்ட்ரியா, பிரியங்கா மோகன், யோகி பாபு, சமுத்திரக்கனி, விக்ராந்த், கிஷோர், அமீர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

வைரலான கிளிம்ப்ஸ் வீடியோ

இதற்கிடையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 'அரசன்' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது. அந்த வீடியோவில் 'பயர்' என்ற கானா பாடல் இடம்பெற்றுள்ளது. இதில் சிம்புவின் கதாபாத்திரத்திற்கு 'தாஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று இணையத்தில் வைரலானது. மேலும், 'அரசன் வேர்ல்டு' கிளிம்ப்ஸ் வீடியோ விரைவில் வெளியாகும் என்று தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தெரிவித்துள்ளார்.

இன்னும் படமாக்கப்படாத கிளைமாக்ஸ் காட்சி

இந்த நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன், 'அரசன்' படத்தின் கிளைமாக்ஸ் காட்சி குறித்து பேசியுள்ளார். அப்போது, "அரசன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி இன்னும் படமாக்கப்படவில்லை. ஆனால், அந்தக் காட்சி குறித்து இயக்குநர் வெற்றிமாறன் என்னிடம் கதையாகக் கூறினார். அதைக் கேட்டபோதே எனக்கு மெய்சிலிர்த்துவிட்டது. அந்த அளவிற்கு பிரம்மாண்டமான காட்சியாக அது இருக்கும்.

மேலும் 'அரசன்' திரைப்படத்தின் சண்டைக் காட்சிகளைப் பொறுத்தவரை, ‘அசுரன்' படத்தையே மிஞ்சும் என தனிப்பட்ட முறையில் நம்புகிறேன். அதுமட்டுமின்றி, 'விடுதலை' பாகம் 1, பாகம் 2 மற்றும் 'வடசென்னை' ஆகிய படங்களின் சண்டைக் காட்சிகளையும் அரசன் மிஞ்சும் என்று உறுதியாகக் கூற முடியும்" என்று தெரிவித்துள்ளார். பீட்டர் ஹெய்னின் இந்தப் பேச்சு தற்போது ரசிகர்களிடையே படத்தின் கிளைமாக்ஸ் குறித்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

SCROLL FOR NEXT