சினிமா செய்திகள்

அயோத்தி ராமர் கோவிலில் தொடங்கும் அர்ஜுனின் புதிய திரைப்படம்

இந்திய வரலாற்றில் ஒரு திரைப்படத்தின் பூஜை விழா அயோத்தி ஸ்ரீ ராம ஜென்மபூமி ஆலயத்தில் நடைபெறுவது இதுவே முதன்முறை ஆகும்.

இந்தியத் திரையுலகின் பல முக்கியமான நட்சத்திரங்கள் பங்கேற்கும் அர்ஜுனின் புதிய திரைப்படம் உருவாகவுள்ளது. தேசத்தின் பெருமையை உலகத் திரையுலகிற்கு எடுத்துச் செல்லும் ஒரு பிரம்மாண்டமான திரைப்படப் பயணம் அயோத்தியில் தொடங்குகிறது.

வரலாற்றுச் சிறப்புமிக்க பூஜை விழா

பிரசிடென்ஷியல் மூவிஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் 3-வது தயாரிப்பாக உருவாகும் இப்படத்தைத் தயாரிப்பாளர் அனுப் மோகன் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார்.

இந்தியத் திரையுலக வரலாற்றில் ஒரு திரைப்படத்தின் பூஜை விழா அயோத்தி ஸ்ரீ ராம ஜென்மபூமி ஆலயத்தில் நடைபெறுவது இதுவே முதன்முறை என்பதால், இவ்விழா பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாளை நடைபெறும் இந்தச் சிறப்பு விழாவில் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு வெளியிடப்படவுள்ளது. இதில் இந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

படக்குழு மற்றும் சிறப்பம்சங்கள்

தேசப்பற்று, வீரம் மற்றும் தியாகத்தைப் போற்றும் வகையில் உருவாகும் இப்படத்தை அர்ஜுன் இயக்குவதுடன், முதன்மைக் கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி மேஜர் விஜய் பார்கவன் கதை மற்றும் திரைக்கதை எழுதியுள்ள இத்திரைப்படத்தில், பாலிவுட் மற்றும் தென்னிந்தியத் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணையவுள்ளனர்.

அயோத்தி ராமஜென்ம பூமி ஆலயத்தில் இந்த படம் தொடங்கப்படுகிறது. அங்கே படம் குறித்த செய்திகள், தலைப்பு அறிவிக்கப்பட உள்ளது. இதனால், இது ராமர், ராமாயணம் சம்பந்தப்பட்ட கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தேசப்பற்று, வீரம், தியாகம் மற்றும் இந்தியாவின் பெருமையைப் போற்றும் வகையில் இந்த படம் இருக்கும் என்பதால், அந்த கதைக்குள் தேசப்பற்று கதையும் இருக்கும் என கூறப்படுகிறது.

படக்குழு கூறுகையில் “சிறப்புமிக்க இந்த நிகழ்வில் இந்தியத் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள், திரைப்படக் கலைஞர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொள்வார்கள். பாலிவுட் மற்றும் பல்வேறு பிராந்தியத் திரைப்படத் துறைகளைச் சேர்ந்த முன்னணி நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் இப்படத்தில் இணைய உள்ளனர். இந்தியத் திரையுலகின் பல முக்கியமான நட்சத்திரங்கள் பங்கேற்கும் பிரம்மாண்டமான பான் இந்திய திரைப்படமாக இது உருவாகவுள்ளது. தேசத்தின் பெருமையை உலகத் திரையுலகிற்கு எடுத்துச் செல்லும் ஒரு பிரம்மாண்டமான திரைப்படப் பயணம் அயோத்தியில் தொடங்குகிறது” என்றார்.

SCROLL FOR NEXT