அருள்நிதி மற்றும் அமீர் இணைந்து நடித்துள்ள ‘வேட்ட சாமி’ திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ் திரையுலகின் தனித்துவமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வரும் நடிகர் அருள்நிதி, தற்போது இயக்குனர் மற்றும் நடிகர் அமீருடன் இணைந்து ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர்களின் இந்த எதிர்பாராத கூட்டணி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த புதிய திரைப்படத்தை ‘பம்பர்’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக கவனம் ஈர்த்த எம்.செல்வகுமார் இயக்குகிறார். இத்திரைப்படத்தை சாமுவேல் மேத்யூ தனது ‘7 மைல்ஸ் பர் செகண்ட்’ தயாரிப்பு நிறுவனம் மூலம் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார். இது அந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் இரண்டாவது திரைப்படமாகும். முன்னதாக, சித்தார்த் நடிப்பில் வெளியான ‘மிஸ் யூ’ திரைப்படத்தை இந்நிறுவனம் தயாரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக ஜிப்ரான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஒளிப்பதிவை ஆர்.டி. ராஜசேகரும், படத்தொகுப்பை ரூபனும் கவனிக்க உள்ளனர். கதையின் மையக்கருவாக ‘சட்டத்திடம் இருந்து தப்பி, இறைவனை எதிர்கொள்வது’ என்ற வாசகம் படத்தின் போஸ்டரில் இடம்பெற்றுள்ளது.
‘வேட்ட சாமி’ திரைப்படத்தின் மூலம் மாதவி திரையுலகில் பின்னணிப் பாடகியாக அறிமுகமாகியுள்ளார். இந்தப் படத்தில், ‘சுடலைமாடன் வேட்டைப்பாடல்’ என்ற நாட்டுப்புறப் பாடலை மாதவி பாடியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப் பாடலின் ஒலிப்பதிவு சமீபத்தில் நிறைவடைந்துள்ளது.
வீரமும் தெய்வ நம்பிக்கையும் மண்ணின் அடையாளம் என்ற கதைக்கருவுடன் உருவாகியுள்ள இந்ததிரைப்படத்தின்படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அருள்நிதி , அமீர் இணைந்து நடிக்கும் ‘வேட்ட சாமி’ திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
அஜய் ஞானமுத்துவின் இயக்கத்தில் அருள்நிதி நடித்த ‘டிமாண்டி காலனி 3’ திரைப்படம் செப்டம்பர் 10-ம் தேதி வெளியாகவுள்ளது.