சினிமா செய்திகள்

“ராமராக கலக்கிய அருண் கோவில்... இப்போது தசரதராக - ‘ராமாயணம்’ பட புதிய போஸ்டர் வெளியீடு!

இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது.

புதுடெல்லி,

நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் ‘ராமாயணம்’ திரைப்படத்தில், அயோத்தி மன்னர் தசரதராக நடிகர் அருண் கோவில் நடிக்கிறார். இதுதொடர்பான புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

மீண்டும் ‘ராமாயணம்’ உலகிற்குள்...

ராமானந்த் சாகரின் புகழ்பெற்ற ‘ராமாயணம்’தொலைக்காட்சித் தொடரில் ராமராக நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் அருண் கோவில். இந்நிலையில், தற்போது அதே காவியத்தை மையமாகக் கொண்ட திரைப்படத்தில் தசரதராக அவர் நடிப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

புதிய போஸ்டரை சமூக வலைதளங்களில் பகிர்ந்த ‘ராமாயணம்’படக்குழு, “ஒரு தலைமுறைக்கே ராமருக்கு உயிர் கொடுத்தவர்... இப்போது அயோத்தியின் மன்னராக மீண்டும் ராமாயண உலகிற்குத் திரும்புகிறார்” எனக் குறிப்பிட்டுள்ளது.

முன்னணி நட்சத்திரங்கள்

இந்த படத்தில் ராமராக ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும், ராவணனாக யஷும், அனுமனாக சன்னி தியோலும் நடிக்கின்றனர். லட்சுமணன் கதாபாத்திரத்தில் ரவி துபே நடிக்கிறார்.

இரண்டு பாகங்களாக வெளியாகும்

இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. முதல் பாகம் வருகிற நவம்பர் 5-ந் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT