சினிமா செய்திகள்

ஆஷா போஸ்லே மறைவு; கவிஞர் வைரமுத்து இரங்கல்

உன் குரல் பாடிக்கொண்டே இருக்கும் இந்தியக் காற்றில் என்றென்றும் என வைரமுத்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

பழம்பெரும் பின்னணி சினிமா பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார். 92 வயதான அவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவர் உடனடியாக தென்மும்பையில் உள்ள பிரீச்கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

சுவாச பிரச்சினை இருந்ததால், செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பாடகி ஆஷா போஸ்லே காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அவரது மறைவுக்கு பலரும் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், கவிஞர் வைரமுத்து பழம்பெரும் பாடகியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

ஆஷா மறைந்துற்றாரா!

பறந்து விட்டாரா

பாதி லதா?

மூச்சை நிறுத்திக்கொண்டதா

மும்பைக் குயில்?

வயதைத்

தீர்மானிக்க முடியாத

தீங்குரல்

சொற்களுக்கு வலிக்குமென்று

வருடிவிடும் மயிலிறகு மனசு

இந்திய மொழிகளையெல்லாம்

உள்வாங்கி உச்சரித்த உதடு

இனி இல்லையா?

நனைந்த துணியாய்க்

கனக்கிறது இதயம்

“வெண்ணிலா

வெண்ணிலா

வெண்ணிலாவே

வந்ததே முதற்காதல்”

அந்தக் குரல் வசீகரத்தால்

முதல் மீசை முளைத்தது

என் வார்த்தைகளுக்கு

போய்வா பாட்டரசி!

உன் குரல்

பாடிக்கொண்டே இருக்கும்

இந்தியக் காற்றில்

என்றென்றும்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.