சினிமா செய்திகள்

"ஆஷாவின் அன்பும் குரலும் மறக்க முடியாது…" இளையராஜா இரங்கல்

அவர் காலமானது எனக்கு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது என இளையராஜா கூறியுள்ளார்.

சென்னை,

பிரபல பின்னணி பாடகி ஆஷோ போஸ்லே மும்பையில் வசித்து வந்தார். 92 வயதான அவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.அவருக்கு சுவாச பிரச்சினை இருந்ததால் செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தநிலையில் ஆஷா போஸ்லே இன்று மதியம் சிகிச்சை பலனின்றி காலமானார்.

மருத்துவமனை வட்டாரம் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 1943-ல் தனது இசை பயணத்தை தொடங்கிய ஆஷா போஸ்லே, தமிழ், இந்தி, தெலுங்கு, மராத்தி என பல்வேறு மொழிகளில் சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

ஆஷா போஸ்லே மறைவுக்கு பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, மத்திய மந்திரிகள் மற்றும் திரையுலகினர், ரசிகர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், "ஆஷாவின் அன்பும் குரலும் மறக்க முடியாது என ஆஷா போஸ்லே மறைவிற்கு இசையமைப்பாளர் இளையராஜா இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

ஆஷாவின் அன்பும் குரலும் மறக்க முடியாது. அவருடைய திறமைக்கு அளவே இல்லை.. வேற எந்த குரலுடன் ஒப்பிட முடியாத தனித்துவம் வாய்ந்த குரல் அவருடையது.. அவர் காலமானது எனக்கு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது.

எப்பொழுது சென்னைக்கு வந்தாலும் என்னை சந்தித்து விட்டு செல்லும் அன்பு சகோதரியுடைய அன்பையும் பாசத்தையும் மறக்க முடியாது.

அவரது ஆத்மா இறைவனிடையே சாந்தி அடைய வேண்டுகிறேன். அவரது குடும்பத்தாருக்கும் என் மனமார்ந்த இரங்கல் செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன்.

என அதில் கூறியுள்ளார்.