சினிமா செய்திகள்

எனக்கு கிடைக்காததை தயாரிப்பாளராக பிறருக்கு கொடுப்பதில் மகிழ்ச்சி - அசோக் செல்வன்

'அன்பில் அவன்' படத்தில் தயாரிப்பாளராகவும் பணியாற்றியதில் பெருமை கொள்கிறேன் என்று அசோக் செல்வன் தெரிவித்துள்ளார்.

ஆர்.கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக்செல்வன், பிரீத்தி முகுந்தன், கதிர்பாலு, மகா டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த வாரம் வெளியாகி ஹிட் அடித்த படம், 'அன்பில் அவன்'. இந்தப் படத்தின் வெற்றியை படக்குழுவினர் சென்னையில் கொண்டாடிய நிகழ்ச்சியில் அசோக் செல்வன் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது:-

'அன்பில் அவன்' படம் தொடர்ந்து வளர்ந்து லாபகரமான நிலையை எட்டியுள்ளது. இனி வரும் நாட்களில் இன்னும் பேசப்படும் என்று நம்புகிறேன். இந்தப் படத்தில் ஒரு தயாரிப்பாளராகவும் நான் பணியாற்றியதில் பெருமை கொள்கிறேன்.

நான் சினிமாவுக்கு வந்த காலத்தில் சுமார் 300 ஆடிஷன்களில் பங்கேற்று இருப்பேன். ஆனாலும் என் திறமை கண்டுகொள்ளப்படவில்லை. திறமையானவர்களுக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லையே... என்ற ஆதங்கம் அப்போது எனக்கு இருந்தது. அந்த ஆதங்கத்தை தயாரிப்பாளராக இப்போது தீர்த்துக்கொண்டு வருகிறேன்.

மகா, கதிர்பாலு, ஆகாஷ், பிரவீன், தீபன் போன்றோருக்கு இந்தப் படம் நல்ல அடையாளத்தை தந்திருப்பதாக உணருகிறேன். அந்த வகையில் எனக்கு கிடைக்காததை தயாரிப்பாளராக பிறருக்கு கொடுப்பதில் மகிழ்ச்சி. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT