சினிமா செய்திகள்

அஸ்வின் நடிக்கும் “குட் நியூஸ்” திரைப்படம் பூஜையுடன் துவக்கம்

நாகேந்திர முருகன் இயக்கத்தில் அஸ்வின், கல்யாணி அனில் நடிப்பில் உருவாகும் ‘குட் நியூஸ்’ திரைப்படம், சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.

‘குக் வித் கோமாளி’ மற்றும் ஆல்பம் பாடல்கள் மூலம் ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமானவர் அஸ்வின். இவர் ‘என்ன சொல்ல போகிறாய்’ என்ற படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார்.

மூவிட்ரான் புரொடக்ஷன் நிறுவனம் தங்களது இரண்டாவது தயாரிப்புப் படத்தை சென்னையில் பாரம்பரிய முறைப்படி, பூஜையுடன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.

‘குட் நியூஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படம், அனைத்து வயதினரும் ரசித்து மகிழும் வண்ணம், பாசம், நகைச்சுவை மற்றும் நெஞ்சை நெகிழ வைக்கும் தருணங்கள் நிறைந்த ஒரு முழுமையான குடும்பத் திரைப்படமாக உருவாகவுள்ளது.

இவ்விழாவில் தமிழ் திரையுலகைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். படத்தின் முதல் காட்சிக்கான கிளாப் அடித்து இயக்குநர் விஜய் துவக்கி வைக்க, புகழ்பெற்ற இயக்குநர் பாலா கேமராவை ஆன் செய்து படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார். நடிகர் ஆர்யா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு படக்குழுவினர் அனைவருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.மூவிட்ரான் புரொடக்ஷன் பேனரின் கீழ் சாய்வினோத் ஜெயக்குமார் பெருமையுடன் தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு, சாய்பிரபு ஜெயக்குமார் இணை தயாரிப்பாளராக இருக்கிறார்.

பிரபல இயக்குநர் பாண்டிராஜிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து, குடும்பங்கள் ரசிக்கும்படியான உணர்வுப்பூர்வமான கதைகளை உருவாக்குவதில் சிறந்த அனுபவம் பெற்ற நாகேந்திரமுருகன் இத்திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ‘குட் நியூஸ்’படத்தின் மூலம் அவர் தனது தனித்துவமான இயக்கத்திலும், கதைசொல்லல் பாணியிலும் வெள்ளித்திரையில் தடம் பதிக்கவுள்ளார்.

இப்படத்தில் அஸ்வின் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக கல்யாணி அனில் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். மேலும், ஜெயராம், ஆஷா சரத், முத்துக்குமார், ஜாபர், குரேஷி, தீபா, வினோதினி, திவ்யா, மணிமேகலை உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.சித்துகுமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.