‘ஆசியாவின் ஆஸ்கர்’ எனப்படும் ஆசிய பசிபிக் திரை விருதை இயக்குநர் ஆர்.கௌதம் பெற்றுள்ளார்.
‘சிக்கலான குடும்பத்தின் உறுப்பினர்கள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான ஆர். கௌதம், 2026 ஆம் ஆண்டுக்கான ‘ஆசிய பசிபிக்’ திரை விருதுகளில், சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருதைப் பெற்றுள்ளார்.
இதன்மூலம் இப்படம் மேலும் ஒரு சாதனைப் பட்டியலில் இணைந்துள்ளது. இந்தாண்டு தொடக்கத்தில் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் வெளியிடப்பட்டது. இதன்மூலம் பெர்லின் விழாவில் திரையிடப்பட்ட 4வது தமிழ் படம் என்ற பெருமையைப் பெற்றது.
மேலும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற மெல்போர்ன் இந்தியத் திரைப்பட விழாவின் தொடக்கத் திரைப்படமாக இத்திரைப்படம் திரையிடப்பட்டு பெரும் பாராட்டைப் பெற்றது.
மெல்போர்ன் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த இயக்குநருக்கான பரிந்துரைப் பட்டியல்களிலும் இடம்பிடித்தது.
இந்நிலையில் ‘ஆசியாவின் ஆஸ்கர்’ எனப்படும் ஆசிய பசிபிக் திரை விருதை இயக்குநர் ஆர்.கௌதம் பெற்றுள்ளார்.
2026 ஆம் ஆண்டு 3000-க்கும் மேற்பட்ட திரைப்பங்கள் இந்த விழாவில் திரையிடப்பட்ட நிலையில், இந்த விருதை வெல்லும் முதல் தமிழ் சினிமா கலைஞர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். இவருக்கு பிரபல இயக்குநர்கள் பா. ரஞ்சித், அனுராக் காஷ்யப் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஒரு குடும்பத்தில் மதுவிற்கு அடிமையான மகன் இறக்கும் நிலையில், அவர்களது உறவில் விரிசல் ஏற்படுகிறது. அதன் பிறகு அவர்களது வாழ்க்கையின் நிலையை மையக் கதையாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. கூழாங்கல் திரைப்பட நடிகர் கருத்தடையான், அஜித், காஞ்சனா செந்தில், டிபிஎஸ் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
“ஒரு இளைஞன் மரணமடைகிறான். ஈமச்சடங்குகள் நடக்கின்றன; ஆனால் துக்கம் அந்தளவுக்கு இல்லை. அந்த மரணம் பல விஷயங்களை உலுக்கி மாற்றுகிறது. குடும்ப உறவுகளுக்குள் இருக்கும் வன்முறையை மிகவும் நுணுக்கமாகவும், வேகத்துடனும், அதேசமயம் வெறுமைக்கும், ஆறுதலுக்கும் இடையே ஊசலாடும் உணர்வுகளையும் இப்படம் காட்டுகிறது. என்ன ஒரு அற்புதமான அறிமுகத் திரைப்படம்!” என இப்படத்தை பெர்லினேல் தேர்வுக்குழு பாராட்டியிருந்தது.
முன்னதாக இந்த விருதை பாலிவுட் கலைஞர்கள் மனோஜ் பாஜ்பாய், நவாசுதீன் சித்திக், ராஜ்குமார் ராவ் ஆகியோர் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.