ஹாலிவுட் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் 'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' (Avengers: Doomsday). மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், ரூசோ சகோதரர்கள் இயக்கியுள்ள இப்படத்தின் இறுதி டிரெய்லர் இணையத்தில் புதிய சாதனையைப் படைத்துள்ளது.
கடந்த நவம்பர் 23-ம் தேதி வெளியான இப்படத்தின் இறுதி டிரெய்லர், முதல் 24 மணி நேரத்திலேயே 563 மில்லியன் (56.3 கோடி) பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் டிஸ்னி நிறுவனத்தின் வரலாற்றிலேயே அதிகம் பார்க்கப்பட்ட டிரெய்லர் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. மேலும், உலக அளவில் அதிக பார்வைகளைப் பெற்ற திரைப்பட டிரெய்லர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது.
இதற்கு முன்பு வெளியான 'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' படத்தின் டீசர் 24 மணி நேரத்தில் 503 மில்லியன் பார்வைகளைப் பெற்றிருந்தது. தற்போது இறுதி டிரெய்லர் அந்த சாதனையையும் முறியடித்துள்ளது. அதேபோல், 'டெட்பூல் அண்ட் வால்வரின்' படத்தின் சூப்பர் பவுல் டீசர் பெற்ற 365 மில்லியன் பார்வைகளையும் கடந்துள்ளது.
இந்தப் பட்டியலில் 'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' திரைப்படத்தின் டிரெய்லர் 718.6 மில்லியன் பார்வைகளுடன் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் 'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' இடம்பெற்றுள்ளது.
ராபர்ட் டவுனி ஜூனியர், கிறிஸ் எவன்ஸ், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், பெட்ரோ பாஸ்கல் உள்ளிட்ட பல முன்னணி ஹாலிவுட் நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இதில் ராபர்ட் டவுனி ஜூனியர் டாக்டர் டூம் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஸ்டீவ் ரோஜர்ஸ், தோர், எக்ஸ்-மென் மற்றும் ஃபென்டாஸ்டிக் ஃபோர் கதாபாத்திரங்களும் இடம்பெறுவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இப்படம் இந்தியாவில் வரும் டிசம்பர் 17-ம் தேதி வெளியாக உள்ளது. டிரெய்லருக்குக் கிடைத்துள்ள வரவேற்பு படத்தின் வசூலிலும் எதிரொலிக்குமா என்ற எதிர்பார்ப்பு ஹாலிவுட் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.