அயோத்தி ராமர் கோவிலில் காணிக்கை வசூல் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சையைத் தொடர்ந்து, காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா இடையே அரசியல் மோதல் தீவிரமடைந்துள்ளது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர்களின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள பா.ஜனதா எம்.பி.யும், நடிகையுமான கங்கனா ரணாவத், காங்கிரஸின் இரட்டை நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இமாசலப் பிரதேச முதல்-மந்திரி சுக்விந்தர் சிங் சுகு, அயோத்தி ராமர் கோவிலில் காணிக்கை முறைகேடு நடந்திருந்தால், அது வெறும் பணத் திருட்டு மட்டுமல்ல, லட்சக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையையும் திருடும் செயலாகும் என்று விமர்சித்திருந்தார்.
அதேபோல், அம்மாநில அமைச்சர் விக்ரமாதித்ய சிங், இதே சம்பவம் காங்கிரஸ் ஆட்சியில் நடந்திருந்தால், பா.ஜனதா நாடு முழுவதும் போராட்டத்தை தூண்டியிருக்கும் என்று குற்றம்சாட்டியிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள பா.ஜனதா எம்.பி. கங்கனா ரணாவத், "பல ஆண்டுகளாக அயோத்தி ராமர் கோவில் கட்டுமானத்தையே தீவிரமாக எதிர்த்த காங்கிரஸ், தற்போது அதே கோவிலை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்த முயற்சிக்கிறது. காங்கிரஸின் இந்த இரட்டை வேடத்தை இமாசலப் பிரதேச மக்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாடே நன்கு அறிந்துள்ளது," என்று கடுமையாக சாடியுள்ளார்.
அயோத்தி ராமர் கோவில் காணிக்கை விவகாரத்தைச் சுற்றி அரசியல் கட்சிகள் தொடர்ந்து மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், இந்த விவகாரம் தேசிய அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.