‘பத்தா’ திரைப்படம் பலரின் வாழ்க்கையில் ஒளியைத் தரும் என நம்புவதாக விஜய் சேதுபதி வெற்றி விழாவில் பேசியுள்ளார்.
விஜய் சேதுபதி - இயக்குநர் பாலாஜி தரணிதரன் கூட்டணியில் உருவாகி வரும் மூன்றாவது திரைப்படம் ‘பத்தா’. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லிஜோமோல் ஜோஸ் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரம் சாய் பிரிதிவ் ராஜ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
இப்படத்தை இயக்குநர் அட்லீயின் ‘ஏ பார் ஆப்பிள் ஸ்டுடியோஸ்’ நிறுவனமும், ‘ஸ்டார் ஸ்டுடியோஸ் 18 - சினி1 ஸ்டுடியோஸ்’ நிறுவனங்களும் இணைந்து தயாரித்துள்ளன.
‘பத்தா’படம் கடந்த 1ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரௌடியான நாயகன் விஜய் சேதுபதி எதிர்பாராத சிக்கலில் சிக்கிக்கொள்ள, அதைச் செய்தவர் யார்? பத்தா அதனைக் கண்டுபிடித்தாரா இல்லையா? என்கிற கதையாக உருவான இது ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.
முதல் நாளில் கிடைத்த நல்ல விமர்சனங்களால் இரண்டாம் நாளிலிருந்து டிக்கெட் விற்பனைகளும் அதிகரித்துள்ளன. இதனால், இப்படம் இதுவரை ரூ. 13 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், இப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, “பத்தா திரைப்படத்தின் கதையைக் கேட்ட பின் சில தயாரிப்பாளர்களிடம் கொண்டு சென்றேன். ஆனால், அவர்கள் விலகிக்கொண்டார்கள். காரணம், ஒரு இயக்குநரின் முந்தைய படம் என்ன வணிகம் செய்திருக்கிறது? எனப் பார்க்கப்படுகிறது. அது வியாபார ரீதியாக சரியானதுதான். யாரையும் குற்றம் சொல்ல முடியாது. இப்படத்தை அட்லீயிடம் கொண்டு சென்றபோது, தயாரிப்பதாகச் சொன்னதுடன் இந்தப்படம் கண்டிப்பாக திரையரங்குகளில் ஹிட் அடிக்கும்; விருதுகளையும் பெறும் என்றார். அதற்கு நன்றி.
என் இயக்குநர் பாலாஜி தரணிதரன் வித்தியாசமாக யோசிக்கும் வாழ்க்கையைக் கொண்டாடும் நண்பர். கவிதைகளைப் போல் ரசனையுடன் இருப்பார். அவர் நிறைய சம்பாதிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். பாலாஜி இயக்கிய 4 திரைப்படங்களில் மூன்றில் நான் நடித்துவிட்டேன். இப்படம் இன்னும் சிறப்பாக அமைந்துவிட்டது. பத்தா திரைப்படம் பலரின் வாழ்க்கையில் ஒளியைத் தரும் என நம்புகிறேன்.
நான்தான் நாயகன் என அழைத்துச் சென்றுவிட்டு சிறுவன் சாய் பிருத்விராஜுக்கு வில்லனாக மாற்றிவிட்டார்கள். குழந்தை நட்சத்திரமாக அட்டகாசமான நடிப்பைக் கொடுத்திருக்கிறான். அவனுக்குக் கிடைக்கிற புகழ் அவனின் படிப்பைக் கெடுத்துவிடக்கூடாது. நன்றாக படிக்கவும் வேண்டும். நடிகை லிஜோமோல் ஜோஸ் நடிப்பைப் பார்த்தபோது என் அம்மாவைப் பார்ப்பது மாதிரி இருந்தது. காரணம், என் அப்பாவை அடக்க முடியாது. அப்படியான கதாபாத்திரத்திற்கு மனைவியாக நடித்து அசத்திவிட்டார். சாய் அபயங்கர் தன் வயதிற்கு மீறிய புரிதலில் இருக்கிறார். கண்டிப்பாக, ஒரு லெஜெண்ட் ஆக வரக்கூடிய ஆள். அவருக்கு என் வாழ்த்துகள் ” எனத் தெரிவித்துள்ளார்.