சென்னை,
தேனி மாவட்டத்திலுள்ள பண்ணைப்புரம் என்னும் கிராமத்தில் பிறந்தவர் இளையராஜா. 1976 ம் ஆண்டு தேவராஜ்-மோகன் இயக்கத்தில், வெளியான 'அன்னக்கிளி' படத்தின் மூலம்தான் தனது இசைப்பயணத்தை தொடங்கினார் இசைஞானி இளையராஜா. இவர் தனது வரலாற்றில் இதுவரை 1,000-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் 7,000 பாடல்களை எழுதி உள்ளார்.
இவர் 2010-ம் ஆண்டு பத்ம பூஷன் விருதையும் 2018-ம் ஆண்டு பத்ம விபூஷன் விருதையும் பெற்றார். இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட உள்ளது. ஆசியாவிலேயே முதல் முறையாக "சிம்பொனி" இசை அமைத்தவர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். இந்த நிலையில், இசைஞானி இளையராஜா இன்று தனது 83-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். சினிமாவிலும் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ஆண்டு என்பதால் லட்சக்கணக்கான ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
அதிகாலை முதலே சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது இசை ஸ்டுடியோவில் ஏராளமான ரசிகர்கள் திரண்டு, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.ரசிகர்களின் வருகையால் இளையராஜாவின் ஸ்டுடியோ பகுதி விழாக்கோலம் பூண்டது. தமிழ் திரையிசையில் அழியாத முத்திரை பதித்துள்ள இளையராஜாவுக்கு சமூக வலைதளங்களிலும் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மாரி செல்வராஜ் இளையராஜாவை நேரில் சந்தித்து தன் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். பின், பத்திரிகையாளர்களைச் சந்தித்தவர், “இசையமைப்பாளர் இளையராஜாவின் 83-வது பிறந்த நாளில் நான் அவருடன் இணைந்திருப்பது என் வாழ்க்கையின் பெரிய தருணம். இந்த மிகப்பெரிய மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக அவரைச் சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்தேன். ராஜா சாருடன் எப்போது பணியாற்றுவது என்பது ஏக்கமாகவே இருந்தது. நான் சினிமா கற்றுக்கொண்டு அவரை அணுக வேண்டுமென இவ்வளவு நாள் காத்திருந்தேன். என் படங்களின் மீது அவர் பெரிய மரியாதை வைத்திருக்கிறார். மஞ்சணத்தியை எழுதும் போது முழுக்க, முழுக்க இளையராஜாவை நினைத்துக்கொண்டே எழுதினேன். இது அவருக்காகவே எழுதப்பட்டது. மனதிலும், புத்தியிலும் இசையை வைத்துக் கொண்டே எழுதிய படம்தான் ‘மஞ்சணத்தி’. இளையராஜா மீது எனக்கு தீராக்காதல், அதை வெளிப்படுத்தும் விதமாகவே அவரை பார்க்கும்போதெல்லாம் முத்தம் கொடுக்கிறேன்” எனக் கூறினார்.