நிவின் பாலி நடிக்கும் ‘பென்ஸ்’ திரைப்படத்தின் 4ம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜின் ‘ஜி ஸ்குவாட்’ நிறுவனம் தயாரிப்பில் ‘பென்ஸ்’ திரைப்படம் உருவாகி வருகிறது. ராகவா லாரன்ஸ் நடிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இத்திரைப்படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு லோகேஷ் கனகராஜ் கதை எழுதியுள்ளார். இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் ஏற்கனவே 'ரெமோ', 'சுல்தான்' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
‘பென்ஸ்’ திரைப்படம் லோகேஷ் சினிமாடிக் யூனிவெர்ஸ்-ல் ஒரு அங்கமாக உருவாகிறது. இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைக்கிறார். வில்லன் கதாப்பாத்திரத்தில் நிவின் பாலி நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் ரவி மோகனும் இணைந்துள்ளார். சம்யுக்தாவும் நடித்து வருகிறார்.
எல்சியூ எனப்படும் லோகேஷ் கனகராஜ் திரைப்பட கதைகளுடன் இணைப்பை ஏற்படுத்தும் படமாகவே ‘பென்ஸ்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு லியோ படப்பிடிப்பு நடைபெற்ற செட்டில் படமாக்கப்பட்டதுடன் அடுத்தடுத்த முக்கிய காட்சிகள் செட் அமைக்கப்பட்டு எடுக்கப்பட்டு வருகின்றன.
இப்படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் நிறைவடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. படப்பிடிப்பு தொடங்கி ஓராண்டுக்கு மேலாகியும் இடைவெளி விட்டு எடுத்து வருவதால் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டது.
தற்போது, நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளனர். இதில், நிவின் பாலிக்கான முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.