சென்னை,
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2023-ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் ரூ.600 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது. ரஜினிகாந்த் - நெல்சன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
முதல் பாகத்தைப் போலவே, இந்தப் படத்திலும் மோகன்லால் மற்றும் சிவராஜ்குமார் சிறப்பு தோற்றங்களில் (கேமியோ) நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. அவர்களுடன் ரம்யா கிருஷ்ணன், பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, சந்தானம், சுராஜ் வெஞ்சரமூடு, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தற்போது படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், ‘ஜெயிலர் 2’ படத்தில் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது கேமியோ காட்சிகள் எதிர்பார்த்ததை விட மிகவும் சிறப்பாக வந்திருப்பதால், படத்தில் அவரது திரைநேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக, படத்தின் மொத்த நீளத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் மற்றொரு கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படும் நடிகர் விஜய் சேதுபதியின் சில காட்சிகள் குறைக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இதுகுறித்து படக்குழு சார்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
முன்னதாக, படம் செப்டம்பர் 3-ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியான நிலையில், தற்போது தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 8-ஆம் தேதி வெளியிடுவது குறித்து படக்குழு ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக, ஹிருத்திக் ரோஷன் கடந்த 1986-ஆம் ஆண்டு வெளியான 'பகவான் தாதா' இந்தி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக ரஜினிகாந்துடன் இணைந்து நடித்திருந்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் மீண்டும் ஒரே படத்தில் இணைவதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.